மாளிகையை இடிக்கும் மாம்சம்

 

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.(கலா 5:17)

கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவரும், கிறிஸ்துவுக்காகப் பணி செய்யத் தங்களை அர்ப்பணித்த அனைவரும் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், அழைப்பின் ஓட்டத்திற்கும் தடையாயிருக்கும் விரோதியை அறிந்துகொள்வது அவசியம். அழைப்பை முன் நிறுத்தி கிறிஸ்துவுக்காக நாம் ஓடத்தொடங்கும்போது, மாம்சத்தை வைத்து வழி மறிப்பான் பிசாசு. இதற்கு பல்வேறு உபாயத் தந்திரங்களை அவன் கையாளுகின்றான். இத்தகைய தந்திரங்களினால், நாம் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு நம்மை விழத்தள்ளுவதிலேயே சத்துரு குறியாயிருக்கிறான். கெத்சமனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து, ஆவியினால் நிறைந்தவராக, ஆவியின் பெலத்துடன் பிதாவை நோக்கி இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தார். ஆனால், சீஷர்களோ மாம்சத்தின் பெலவீனத்தால் வீழ்ந்து கிடந்தனர். சீஷர்களண்டைக்கு வந்த இயேசு, ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது (மத் 26:41) என்று ஆவியின் பெலத்தையும், மாம்சத்தின் பெலவீனத்தையும் அவர்களுக்கு வித்தியாசப்படுத்திக் காண்பித்தார். ஆம், ஆவியினால் நடத்தப்படும் நாம் பெலமுள்ளவர்கள்.
உற்சாகமாக கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய முனைவோரின் உடலைப் பாதிக்கும் வியாதிகளும், ஊழியத்தினின்று பலரை ஒதுங்கச் செய்துவிடுகின்றன. தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவர் கர்த்தர் (சங் 35:27) என்றபோதிலும், சுகவீனங்கள் நம்மை மேற்கொள்ளும்போது, பலமுறை ஜெபித்தும் நம்முடைய சரீரங்களில் தொடர்ந்து நீடிக்கும்போது, 'என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்று பவுலுக்கு தேவன் சொன்ன பதிலே நம்முடைய நினைவுகளை ஆளவேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரமே நம்முடைய பலவீனங்களைக்குறித்து மிகவும் சந்தோஷமாய் நாம் மேன்மைபாராட்ட முடியும் (2கொரி 12:9). பெலவீனங்ள் வாழ்க்கையில் தொடருமென்றால், கர்த்தரின் கிருபை நம்முடைய வாழ்வில் நீடிக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், இன்று பலரை இப்படிப்பட்ட சத்தியத்தினின்று சத்துரு சரிந்துவிழும்டிச் செய்துவிட்டான். சத்தியத்தைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள் பலர், கிருபையைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள் பலர், அது தங்கள் சரீரத்தில் கர்த்தரால் செயல்படுத்தப்படுகின்றது என்ற அறிவிற்குத் தூரமாகிவிட்டதால், பாதி ஓட்டத்திலேயே மாம்சத்தைப் பாரமாக எண்ணி தளர்ந்துவிட்டனர். நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1கொரி 3:16) தேவனுடைய ஆலயத்தில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, கிருபையினால் ஈடுகட்டும் பொறுப்பு தேவனுக்கு உண்டு. ஆலயத்தை அல்ல, ஆலயத்தில் இருக்கும் அவரையே நோக்கிப்பாருங்கள், பிழைப்பீர்கள்.
ஆவிக்குரியவர்களாகிய நாம், விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (கலா. 5:19-21) போன்ற மாம்சத்தின் கிரியைகளை செய்யாதிருக்கவும், அவைகள் எவ்விதத்திலும் நமக்குள் செயல்படாதிருக்கவும் தடுக்கும் ஆற்றலுடையவர்கள். எனவே பவுல், 'மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்' (ரோம 8:13) என்று ஆவியின் பெலனை அடையாளப்படுத்திக் காண்பிக்கின்றார். மாம்சத்தின் கிரியைகள் நம்மைச் சுற்றி நின்றாலும், நெருங்கி வந்தாலும், நம்மோடு போராடினாலும், நாமோ மாம்சத்தின்படி போர் செய்ய அழைக்கப்பட்டவர்களல்லவே. நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2கொரி 10:4). மாம்சத்தின் யுக்திகளைக் கையாண்டு மாம்சத்தை ஜெயிக்க அழைக்கப்பட்டவர்களல்ல நாம், ஆவியின் பெலத்தினால் மாம்சத்தை வேரறுக்கத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.
ஆவிக்குரிய வாழ்க்கையில், ஊழியத்தின் பாதையில் மாம்சத்துக்குரியவர்களை உட்புகுத்தியும் சத்துரு ஊழியர்களோடு போராடும் காலம் இது. அர்ப்பணிப்புடன் ஊழியத்தில் தங்கள் வாழ்க்கையை ஊற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்களை, மிஷனரிகளை, பணிக்களத்திலிருந்து துரத்திவிடும்படியாக, மாம்சத்துக்குரியவர்களை சத்துரு உட்புகுத்துவான். தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அழைப்பிலிருந்து திசைமாறிச் செல்லும்படியாகவும், தரிசனத்தோடு வந்தவர்கள் தரிசனத்தை விட்டுவிட்டு தெரித்தோடும்படியாகவும், அவர்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யவிடாதபடிக்கு, மாம்சத்துக்குரியவர்கள் ஆவிக்குரியவர்களோடு மல்யுத்தம் பண்ணுவார்கள். இதையே கலாத்திய சபைக்கு பவுல் எழுதுகின்றார் (கலா. 5:17). இத்தகைய மாம்சத்துக்குரியவர்களை ஊழியத்திற்குள், ஸ்தாபனத்திற்குள் சத்துரு நுழைப்பதின் நோக்கம், ஆவிக்குரியவர்களுக்கு அவர்களைக் கண்ணிகளாக மாற்றி அவர்களை வீழ்த்தவே, ஆவிக்குரியவர்களை ஊழியத்தினின்று அப்புறப்படுத்தி, மாம்சத்துக்குரியதாக ஊழியத்தை மாற்றிக்கொள்ளவே. சத்துருவின் இத்தந்திரத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டும். உலகில் பல ஊழியங்களை சத்துரு இத்தகைய தந்திரத்தினால் கையகப்படுத்திக்கொண்டான். எனவே, ஊழியங்களாக ஒரு காலத்தில் இருந்த ஸ்தாபனங்களெல்லாம் இப்போது, வியாபார ஸ்தலங்களாகிவிட்டன. ஆவிக்குரிய கூட்டங்கள் நடைபெற்ற இடங்களிலெல்லாம் மாம்சங்கள் கூத்தாடுகின்றன. தரிசனம் பெற்றவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியாதபடி அவர்களின் பாதையில் முட்களாக மாறி, அவர்களைத் தடம்புரளச் செய்யும் மாம்சத்துக்குரியவர்களால் சத்துரு கொண்டுவரும் ஆபத்துக்களுக்கு, நம்மையோ, நம்முடைய ஊழியங்களையோ, ஸ்தாபனங்களையோ இரையாக்கிவிடாதபடிக்குக் காத்துக்கொள்வோம்.
சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள். அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.(எஸ்றா 4:1-3) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, சத்துருக்களை உட்புகுத்தவேண்டும் என்ற பிசாசின் திட்டம், சத்தியத்தை அறிந்த தேவ மனிதர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது.
மாம்சத்துக்குரியவர்களோடேயே பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்து, ஐக்கியங்களிலும் அவர்களுடன் தொடர்ந்திருந்ததினால் அநேகருடைய ஆவிக்குரிய மாளிகைகளும் இடிந்து நொறுங்கிவிட்டன. குடிகாரர்களும், விபச்சாரக்காரரும், திருடரும், ஆண்புணர்ச்சிக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும் பக்கவழியாய் நுழைந்து, ஆவிக்குரியவர்கள் அஸ்திபாரமிட்ட மாளிகைகளில் வாழ்ந்து, மாம்சத்துக்குரியதாகவே அதனை மாற்றிவிடுகின்றனர். ஆவிக்குரிய தலைவர்களின் பிள்ளைகள் என்ற அடையாளத்தில் மாம்சத்துக்குரியவர்களை மாளிகைக்குள் அமர்த்தி, மாளிகையின் அஸ்திபாரம் வரை அடித்துநொறுக்க சத்துரு எடுக்கும் பிரயத்தனங்களை அடையாளம் கண்டுகொள்வோம். மாம்சத்துக்குரிய அடுத்த தலைமுறையினரை ஊழியத்தில் சத்துரு புகுத்துவதின் நோக்கம், ஊழியத்தின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தவே. மாளிகைகளை இடிக்க மாம்சத்தினால் உருவெடுக்கும் தந்திரங்களை ஆவியின் பெலத்தால் முறியடிப்போம்.