பொல்லாத புத்திமான்கள்

 

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத் 7:11)

இயேசுவின் வாழ் மொழிந்த இந்த வார்த்தைகளை அடிக்கடி பல்வேறு ஊழியர்களின் உபதேசத்திலும், பிரசங்கத்திலும் கேட்டிருந்தாலும், நாமே பலமுறை இதனைத் தியானித்திருந்தாலும், இதில் புதைந்துள்ள சத்தியத்தை மேலும் புரிந்துகொள்வது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வளர்ச்சியைக் கொடுக்கும். வேடமிட்டு அலையும் மனுக்குலத்தை விரும்புகிறவன் பிசாசு, வேடமிடுவோரைக் கண்டு சந்தோஷமிடுகிறவன் பிசாசு, வேடங்களுக்கான பல்வேறு விதங்களையும் கண்முன் கற்றுக்கொடுப்பவன் பிசாசு. இயேசுவை நாம் ஏற்றுக்கொண்டாலும், இரட்டை வேடத்தை களைந்துவிடாதபடி களைகளாக சிலவற்றை நமது வாழ்க்கையின் வழிகளெங்கும் சுமந்துசெல்லும்படி ஏமாற்றிவிடுகின்றான் அவன். சத்துருவால் இப்படி ஏமாற்றப்பட்டு, மாய்மாலத்தைத் தரித்துக்கொண்ட மனிதர்கள், ஒருபுறம் மதியுள்ளவர்களாகவும் மறுபுறம் மதிகேடாகவும் நடக்கின்றனர். இப்படிப்ட்டோரிடத்தில் நல்லவைகளும் உண்டு, பொல்லாதவைகளும் உண்டு. இவர்களால் போதிக்கப்படுகிறவர்களும் உண்டு, பாதிக்கப்படுகிறவர்களும் உண்டு.

பல்வேறு தருணங்களில், பல்வேறு குணங்களுடன் தங்களை வெளிப்படுத்தும் மனிதர்கள் உலகத்தில் அநேகர். ஒருரால் நல்லவர் என்று சொல்லப்படும் மனிதனோ மற்றொருவருக்கு தீமை இழைத்தவன். அப்படியே, ஒருவரால் தீயவன் என்று சொல்லப்படும் மனிதனோ மற்றறொருவருகு;கு நல்லவனாகத் தென்படுகின்றான். இது மனிதனின் இருபுற வாழ்க்கையையே சுட்டிக்காட்டுகின்றது. எல்லாருக்கும் நன்மையையே செய்துகொண்டிருக்க அறியாதவன் மனிதன். ஆனால், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (மத். 5:44), உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் தரித்திரருக்கு நன்மை செய்யுங்கள் (மாற். 14:7), நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்யுங்கள் (லூக். 6:35) என்று உபதேசித்தார் இயேசு. தனக்கு தீமை செய்வோராயிருந்தாலும், நன்மை செய்வோராக இருந்தாலும், யாவருக்கும் நன்மை செய்கிறவராகவே அவர் சுற்றித்திரிந்தார் (அப். 10:38); அவரது நிலைப்பாட்டில் மர்றமில்லாதிருந்தது. தீயோர் மேலும் நல்லோர் மேலும் சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுய்யவர்கள் மேலும், அநீதியுய்யவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் (மத். 5:45) என்று பிதாவைக் குறித்தும் இயேசு சொன்னாரே. பிதாவின் குணமே அவரது குமாரனாகிய இயேசுவினிடத்தில் காணப்பட்டது, அதுவே அவரது பிள்ளைகளாகிய நம்மிடத்திலும் காணப்படவேண்டியது அவசியமல்லவா; அதுதானே அவரது விருப்பமாகவும் இருக்கின்றது. நல்லலோருக்கு மட்டும் நல்லதைச் செய்துவிட்டு, தீயோருக்கு தீமைகளைச் செய்யும் பொல்லாத புத்திமான்களாக நாம் காணப்படக்கூடாது. துதித்தலும், சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாகுமோ? கூடாதே.

பவுலும், தனது வாழ்க்கையின் முன்நிலையில் இவ்வித அனுபவத்தை தான் சந்தித்ததை எடுத்துக்கூறுகின்றாரே. நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன் (ரோமர் 7:19) என்கிறார் பவுல். ஒருபுறம் நன்மை செய்யவேண்டும் என்ற விருப்பம், மற்றொருபுறமோ தீமையைச் செய்துவிடுகின்ற ஈர்ப்பு. இவைகளிலிருந்தெல்லாம் விடுதலைபெற்ற பவுல் உயர்ந்த கோட்பாட்டினை ஆவிக்குரிய உலத்திற்கு எழுதிச்சென்றுள்ளார். மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும் (ரோம 14:21) என்கிறார். இவை அனைத்தையும் செய்வது தவறல்ல என்றாலும், ஒருவன் தவறாக எண்ணுவதற்கு அவைகள் இடமளிக்குமென்றால் அவைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது என்கிறார் பவுல். ஒருபுறம் பொல்லாதவர்களாகவும், மறுபுறம் நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்தவர்களாகவும் நாம் வாழாதிருப்போம்.

நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும்., அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே. இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:19-24) என்று ஒருபுறம் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிறவர்களாகவும், மறுபுறம் நியாயப்பிரமாணத்தை மீறி நடக்கிறவர்களாகவும் காணப்படும் ஊழியர்களை பவுல் எச்சரிக்கின்றாரே, இத்தகைய பொல்லாத புத்திமான்களால் தேவ நாமத்திற்கும் பொல்லாப்பு வந்து சேர்ந்துவிடுகின்றதே. ஒருபுறம் களவு, விபச்சாரம், அசுத்தம், காமவிகாரம் போன்ற பொல்லாத காரியங்களைச் செய்துகொண்டே, மற்றொரு புறம் அழகாக வேதத்திலிருந்து போதிக்கும் ஊழியர்களாயிருக்கக் கூடாது. தங்களது ஊழியத்தில் நன்மையானவைகளையே செய்துகொண்டு, பிறரது ஊழியத்தையோ கெடுக்கும் குணம் கொண்டு அலையும் ஊழியர்கள் பலர் உண்டு. தங்கள் ஊழியத்தின் வளர்ச்சியையும், பிற ஊழியத்தின் வீழ்ச்சியையும் எதிர்நோக்குபவர்கள் இவர்கள்.

இயேசுவின் காலத்தில் இருந்த வேதபாரகரும், பரிசேயரும் இத்தகையோராகவே காணப்பட்டனர். எனவே இயேசு, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் (மத் 23:3) என்று வேதபாரகரைக் குறித்தும், பரிசேயரைக் குறித்தும் சொல்லுகின்றார். அவர்கள் சொல்வது சரியானது ஆனால், செய்வதோ வேதத்திற்கு முரணானது. நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருந்தார்கள் ஆனால், பொல்லாதவர்களாயிருந்தார்கள். வாழ்க்கையின் எந்த ஒரு காரியத்திலும் வேதத்திற்கு விரோதமாக, பொல்லாதவர்களாக சத்துரு நம்மை மாற்றிவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். நல்ல ஈவுகளே நம்மிடமிருந்து புறப்படட்டும்.