மரணத்தையே பேசும் மனிதர்கள்

 

இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் (மத் 18:20). இந்த வசனம் நாம் அறிந்த ஒன்றே. மேலும், கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரொடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது (மல். 3:16) என்று மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் உரைத்ததையும் நாம் அறிந்திருக்கிறோம். இரண்டு தேவப் பிள்ளைகளுக்கு இடையே முப்புரி நூலாக தேவன் இணைந்துகொள்கிறார் என்பதை சாலமோனும் எழுதுகின்றான் (பிரசங்கி 4:12). இவ்வத்தனையையும் நாம் அறிந்திருந்தபோதிலும், மனைவியுடன், நண்பர்களுடன் செய்யும் உரையாடல்களிலும், அலுவலகத்தில் பேசும் வார்த்தைகளிலும், உயர் அதிகாரிகளிடத்தில் உரையாடும் போதும், குழுமியிருக்கும் வேளையில் பேசும் வார்த்தைகளிலும் பல நேரங்களில் தவறிவிடுகின்றோம். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று பேரை அக்கினிச் சூளையிலே போடுவதற்கு ராஜா கட்டளையிட்டான். பலசாலியான மனிதர்கள் மூவரையும் கட்டி அக்கினிச் சூளையிலே போட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்;டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது. ஆனால், ராஜாவோ சூளைக்குப் பக்கத்தில் சென்றால் தானும் மரித்துவிடுவேன் என்பதைப் பொருட்படுத்தாமல், உள்ளே விழுந்த மூன்றுபேரையும் பார்க்க முற்பட்டான். அங்கு நான்குபேரைக் கண்ட ராஜாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான் (தானி 3:19-25). தேவ பிள்ளைகள் எங்கு இருந்தாலும், தேவன் அங்கு இருக்கின்றார். எனவே அவரை அறிந்துகொண்ட நாம் ஒன்றாயிருக்கும்போது, தேவன் உடனிருக்கிறார் என்ற அறிவோடும், புத்தியோடும் உரையாடக் கற்றுக்கொள்ளுவோம். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேபோ என்ற மூன்றுபேரையும் தூக்கிக்கொண்டு போன மனிதர்களோடு தேவன் இல்லை, சூளையை நெருங்கியதும் அவர்களது மரண வேளையும் நெருங்கியது. தேவபுத்திரனோ தன் பிள்ளைகளோடு கூட இருந்தார்.

ஆம், நம் தேவன் எத்தனை அன்புள்ளவர்; நாம் எங்கு இருந்தாலும் அங்கு இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர். நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை (உபா. 31:6) என்ற தேவனை உடன் வைத்துக்கொண்டிருக்கும் நாம், ஒவ்வொரு இடங்களிலும், ஒவ்வொரு மனிதர்களோடும் உரையாடல்களிலும் அதிக கவனமாயிருக்கவேண்டியது அவசியமல்லவா! தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்ளூ ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1பேது 5:8) தேவபுத்திரன் உடன் இல்லாவிட்டால் சுற்றித்திரிகிற சத்துருவுக்கு நீங்கள் இரையாக நேரிடும்.

இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததற்குப் பின்னர், இரண்டு பேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். அவர்களது உள்ளத்தை இயேசுவின் மரணம் நிறைத்திருந்தது; இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதையோ அவர்கள் அறியாதிருந்தார்கள். இயேசு உயிர்ந்தெழுந்துவிட்ட அறிவில்லாத அந்த இருவரும், இயேசுவின் மரணத்தைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தார்கள். இயேசு உடன் நடந்துசென்றபோதிலும், அவர்களோ மரணத்தைக் குறித்தே பேசிக்கொண்டிருந்ததால் அவரை அறிந்துகொள்ளமுடியாதிருந்தார்கள். அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது (லூக். 24:13-16). மரணத்தைக் குறித்து மாத்திரமே துக்கத்துடன் பேசிக்கொண்டிருந்த அவர்களுடைய வார்த்தையும், உயிர்த்தெழுந்து மூன்றாம் நபராக அவர்களுடன் நடந்துவரும் தன்னைக் காண இயலாத அவ்விருவரின் கண்களையும் கண்ட இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார் (லூக் 24:17). அப்பொழுதும், அவர்கள் 'இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ? நசரேயனாகிய இயேசு தேவனுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது' (லூக் 24:18-21) என்று இயேசுவின் மரணம் வரைக்கும் உள்ள விஷயங்களை மாத்திரமே அவர்கள் சொன்னார்கள்; உயிர்த்தெழுதலோ அவர்களது அறிவுக்குத் தூரமாயிருந்தது. தங்கள் நம்பிக்கையும் வீணாகப் போயிற்று என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தபோதே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது (லூக். 24:30,31).

பிரியமானவர்களே! உயிர்த்தெழுந்த இயேசு நம்முடன் இருக்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நடந்துவரும்போது நாம் என்ன பேசிக்கொள்கிறோம்? தேவையற்றவைகளையும், வீணானவைகளையும் நமது வாய் பேசிக்கொண்டேயிருந்தால் உடன் நடந்துவரும் இயேசுவைக் குறித்த உணர்வற்றவர்களாகவும், அவரைக் காண பலனற்றவர்களாகவுமே நாம் இருப்போம். பிறருடைய குற்றங்களையே நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், குற்றம் செய்தவன் மனந்திரும்பியிருப்பான்; அந்த அறிவு இல்லாதவர்களாக நாம் காணப்படுவோம். ஆவிக்குரியவர்களே, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களே, ஊழியக்காரர்களே உங்கள் அறிவை update செய்துகொள்ளுங்கள். இல்லையெனில், பழையன உங்கள் மூளையைப் பாழாக்கிவிடும், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையும் பழுதாகிவிடும். நேற்று நடந்தது அல்ல, இன்று என் தேவன் என்ன செய்திருக்கிறார் என்ற அறிவு உங்களுக்கு உண்டா? அப்படியில்லையென்றால் உயிர்த்தெழுந்த இயேசுவை நீங்கள் சந்திக்கவேண்டியது அவசியம்.

காரைக்குடியில் உள்ள அழகப்பா பாலிடெக்னிக்கில் நான் கல்வி பயின்றேன். பல வருடங்களுக்குப் பின்பாக அதனைச் சென்று பார்க்கும் ஆவல் எனக்கு உண்டானது. 1991-ம் ஆண்டு நான் அங்கு பயிலும்போது, அங்குள்ள ஒரு ராம்நகர் என்ற ஒரு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்து படித்தேன். இரட்சிக்கப்ட்டு, ஜெபக்குழுவின் தலைவனாகவும், பல்வேறு ஆலயங்களில் பிரசங்கித்தவனாகவும் மாறியிருந்த நான் சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அதனைப் பார்க்கவேண்டும் என்று சென்றேன். என்னுடன், நண்பர்கள் ஜெப ஐக்கியத்திலுள்ள சகோதரர் ஜேக்கப்பை உடன் அழைத்துச் சென்றேன். கல்லூரியைச் சுற்றிப் பார்த்தேன், பழைய ஞாபகம் என் நெஞ்சை நிரப்பியது. நான் அடிக்கடி சென்று தேனீர் அருந்தும் கடைக்குச் சென்றேன். அந்தக் கடையில் உள்ளே நுழைந்ததும், 'கணேஷ்' என்ற அந்தக் கடைக்காரர், ஒரு சிகரெட்டை எடுத்து எனக்குக் கொடுத்தார். நான் குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, உடன் அழைத்துச் சென்றிருந்த ஜேக்கப் என்ற வாலிபனைப் பார்த்து சிரித்தேன். இதுதான் என்னைப் பற்றிய இந்த கடைக்காரர் வைத்துள்ள அறிவு என்று சொன்னேன். அங்கிருந்த நாட்களில் என்னை அவர் ஒரு ரவுடியாகவே பார்த்திருந்தார், பாவத்திலிருந்து இயேசு என்னை இரட்சித்தார் என்பதோடு கூட கோபத்திலிருந்தும் என்னை இரட்சித்தார் என்பதை பல தருணங்களில் நான் இணைத்துக் கூறியிருக்கிறேன். என்னை இப்படியே பார்த்திருந்த அந்த கடைக்காரர் அப்படிச் செய்ததை நான் தவறாக எண்ணவில்லை. என்னைப் பற்றி அவருக்கு இருந்த அறிவு அவ்வளவுதான்; ஆனால், நானோ அந்த அறிவை மாற்றினேன். தேனீரை மாத்திரம் அருந்திவிட்டு, தற்போதைய எனது வாழ்க்கையையும் கிறிஸ்துவை அறியாத அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டு திரும்பினேன். இன்றும் எனது பழைய வாழ்க்கையின் மரணத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களை நான் அறிவேன், சிலரை அறியேன். ஆனால், கிறிஸ்துவுடன் நான் உயிர்த்தெழுந்ததே தற்போது பேசப்படவேண்டியது என்று உணர்த்தவே இதனை எழுதுகிறேன். மற்றவர்களுடைய மரணத்தைப் பற்றியே பேசுபவர்களாக நீங்கள் இருந்தால், மனம் திரும்புங்கள், அந்த நபரின் இன்றைய நிலையை அறிந்துகொள்ளுங்கள்.

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ 3:2) என்பது பவுலின் அறிவுகளில் ஒன்று. நடந்து முடிந்தவைகளைப் பற்றிய அறிவு மாத்திரமே அநேகருக்கு இருக்கின்றது, அதைப் பற்றியே பேசிப் பேசி தங்கள் கண்களைக் குருடாக்கிவிடுகின்றனர். நடந்து முடிந்தது என்று அவர்கள் நினைப்பதற்குப் பின்னர் தேவன் செய்யும் அற்புதமான, மகத்துவமான செயல்களைக் காண அத்தகைய மனிதர்களால் கூடாமல் போய்விடுகின்றது. நம்முடைய கண்களை நாமே குருடாக்கிக்கொள்ளவேண்டாம், அருகிலே பாருங்கள் உங்களை அழைத்தவர் நிற்கிறார்; இன்றைய அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.