கொள்ளளவும், எள்ளளவும்

 

தேவனின் சிந்தையை தெளிவாக நாம் வசனங்களின் வாயிலாக அறிந்துகொள்ளாதபட்சத்தில், அவர் விரும்புகிற வண்ணம் ஓடாமல், நமக்குத் தெரிந்திருக்கிற வண்ணம் ஓடிக்கொண்டிருப்போம். இயேசுவின் உவமைகள் பல தேவ ராஜ்யத்தின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நமது இதயத்தில் விதைக்கப் போதுமானவைகள்.

ஆம், பிரியமானவர்களே! நாம் அழைக்கப்பட்டதின் நோக்கம் இதுவே. அவருடைய ஆஸ்தியினைப் பெருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நாம். இதையே மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாகவும், 'என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்' (மல். 3:17) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நாம் அவருக்காகச் சேர்த்துவைக்கும் சம்பத்துக்களை வாங்கவரும் நாள் விரைந்து வருகின்றது. தேவனுக்கு அதிகமான ஆத்துமாக்கள் வேண்டும், பரலோக ராஜ்யம் நிரம்பவேண்டும் எனவேதான், 'ஆதியில் தாம் படைத்துருவாக்கின ஆதாம், ஏவாள் ஆகியோரை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்' (ஆதி. 1:28) என்று சொன்னார். பரலோகத்தில் புதிய மனிதர்கள் பிறக்கப்போவதில்லை. எனவே, பரலோகத்திற்குச் சென்றபின்னர் அங்கு பிள்ளைகளைப் பெற்று பரலோகத்தை நிரப்பும் பாக்கியம் மனிதர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. பரலோகம் நிரம்பவேண்டுமென்றால், மனிதர்களின் தொகை பூமியில்தான் பெருக்கப்படவேண்டும்; இதனை மனிதர்கள்தான் செய்யவேண்டும். எனவேதான், இயேசுவும், 'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு' (யோவான் 14:2) என்று கூறுகின்றார். கட்டப்பட்ட வீடுகள் காலியாகக் கிடந்துவிடக்கூடாதே, வருவார்கள் என்று மனவிருப்பத்துடன் இயேசு ஆயத்தம்பண்ணிய வாசஸ்தலங்களுக்கு மனிதர்கள் வராமல் அவர் மனவருத்தமாகிவிடக்கூடாதே. மனிதர்களின் தொகை பூமியில் பெருகிவிடாதபடி, எத்தனையோ தடைகள் உண்டாகிக்கொண்டிருக்கின்றன. இனி மனிதர்கள் பிறந்தால் வசிக்க முடியாது என்றும், சாப்பாடு கிடைக்காது என்றும், வேலை கிடைக்காது என்றும், பூமியே தாங்காது என்ற எண்ணத்துடன் 'போதும், போதும்' என்ற கூச்சலே பெருகிக்கொண்டிருக்கின்றது. தடைகளுக்குக் காரணங்களை அலசி ஆராயாமல், பலுகும் மனுக்குலத்தைப் பராமரிக்கவும், போஷிக்கவும், வழியறியாமல் உலகம் திகைப்பதினாலேயே இந்த நிலை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது பூமியில் பெருகியிருக்கும் மனிதர்களை, தேவனின் சம்பத்துக்களாக மாற்றவேண்டியது நமது கடமை. பரலோகத்தின் கொள்ளளவை, எள்ளளவாக நாம் நினைத்துவிடவேண்டாம். மனிதர்களும் பெருகவேண்டும், சம்பத்துக்களும் பெருகவேண்டும் இதுவே வேதம் போதிக்கும் சத்தியம். இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:3). 'பலுகிப்பெருகி பரலோகத்தை நிரப்புங்கள்' என்ற கட்டளை பரலோகத்தில் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. ஆவி அவரிடத்டதில் திரளாயிருந்தாலும், பூமியிலே மனிதர்களைப் பிறக்கச் செய்து, பரலோகத்திலே வீற்றிருக்கச் செய்வது தேவனது திட்டம். அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்டதில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன்ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே (மல் 2.15). இந்தப் பணி உலகத்தில் நடைபெறவேண்டியது.

தான் இல்லாதபோதிலும் தனது ஆஸ்தி பெருகிக்கொண்டேயிருக்கவேண்டும் என்று நினைக்கும் எஜமானைக் குறித்து இயேசு போதித்தார். மனிதனாக இயேசு இவ்வுலகத்தில் தற்போது இல்லாதபோதிலும், மனிதர்களான நமக்கு இந்த மாபெரும் பணி கொடுக்கப்பட்டிருக்கின்றது. மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷ நூலின் பதிவுகளை ஒன்றிணைத்து நாம் பார்த்தால், பல உண்மைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான். புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான் (லூக் 19:12,13). பிரபுவாகிய எஜமான் திரும்பி வரும்போதோ, மூன்று பேரை மாத்திரமே அழைக்கப்படுகின்றார்கள்; அப்படியென்றால், மற்ற ஏழு பேர் எங்கே? பத்து ராத்தலும் பத்து பேருக்கு மொத்தமாகத்தான் கொடுக்கப்பட்டது. பத்து பேருக்கும் 'வியாபாரம் பண்ணுங்கள்' என்ற கட்டளையும் கொடுக்கப்பட்டிருந்தது; ஆனால், இரண்டு பேர் மாத்திரமே வியாபாரம் செய்து சம்பாதித்ததாகவும், ஒருவனோ அப்படியே அதனை வைத்திருந்ததாகவும் எஜமானின் வருகையின்போது வெளியாக்கப்படுகின்றது; இதன் அர்த்தம் என்ன? எஜமான் எதிர்பார்த்ததோ, பத்து ராத்தலையும் ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ளாமல், மொத்தமாக, குழுவாக இணைந்து வியாபாரம் பண்ணவேண்டும் என்பதே. ஆனால், நடந்ததோ வேறு, அவனவன் தன் தன் விருப்பத்தின்படி தனியாக வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். முடிவோ, ஊழியக்காரர்களிலேயே மூன்று பேர்தான் மிஞ்சினார்கள்; மற்ற ஏழு பேரும் என்ன ஆனார்களோ? எனக்கு ராத்தலே வேண்டாம் என்று போய்விட்டார்களோ அல்லது எடுத்துச் சென்ற ராத்தலை இழந்துவிட்டார்களோ? நம்மால் அவைகள் அறியக்கூடாதவைகள். என்றபோதிலும், குழுவாக நாம் இணைந்து செயல்பட்டால், எஜமான் இல்லாவிட்டாலும், அவருடைய சம்பத்து பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கொத்ததாய், மத்தேயுவும் தனது நூலில், அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது (மத் 25:14) என்று இயேசுவின் உவமையினைக் குறிப்பிடுகின்றார். அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான் (மத் 25:15) என்று எழுதுகின்றார். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத். 25:16-22). இரண்டு பேர் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிதத்தார்கள்; ஒருவனோ எஜமானுடையதை அப்படியே வைத்திருந்தபோதிலும், புறம்பான இருளிலேயே தள்ளிப்போடப்பட்டான் (மத். 25:30). ஊழியர்களே, தாலந்தை வாங்கினவர்களே தள்ளப்பட்டுப்போவார்களென்றால், 'உள்ளதும் போன கதைதான்'. எனவே; எச்சரிக்கையோடு ஊழியம் செய்வோம். பரலோகத்தின் கொள்ளவை, எள்ளளவாக்கிவிடக்கூடாது.