சிந்திப்போன இரசம்

 

கிறிஸ்துவின் சேனை வீரர்களாக முன்னேறிச் செல்லும் நமக்கு முட்டுக்கட்டைகளாக முன் நிற்கும் காரியங்கள் பல உண்டு. சத்துருவின் சோதனைகள் ஒருபுறம் நம்மை எதிர்த்தாலும், நம்மைச் சந்திக்கும்போது அதத்தனையும் தோல்வியையே சந்திக்கும் என்பது நாம் அறிந்ததே. எனினும், நமது ஓட்டத்தில், நாமே பல விதங்களில், பல வேளைகளில் வீழ்ந்துவிடக்கூடும். மணவாளனான இயேசு என்ன எதற்கு அழைத்திருக்கிறார்? என்ற கேள்விக்கு மனதில் சரியான பதிலை நாம் கொண்டிருந்தால், அதையே அழைப்பு எனக்கருதியிருந்தால் நம்முடைய கால்கள் சறுக்குவதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். நான் தெரிந்துகொள்ளப்பட்டது இதற்காகவே என்ற அஸ்திபாரமே ஊழியத்திற்காக ஆரம்ப அர்ப்பணிப்பு. அவர்கள் மாத்திரமே, அங்கும் இங்கும் மேயாமல், ஓடாமல், தங்களுக்கென வகுக்கப்பட்ட ஓட்டத்தில், நேர்மையாக ஓட்டத்தை ஓடி முடிப்பார்கள். பிறருடைய ஓட்டத்தில் நுழைந்து அடுத்தவருக்கும் தொந்தரவு கொடுப்பவர்களாக இருக்கமாட்டார்கள். தன்னைப் போன்ற அழைப்புடைய பிறரைக் காணும்போது, அவர்களுடன் இணைந்து குழுவாகச் செயலாற்றும்படி தங்களை அர்ப்பணிப்பார்கள்.

ஒருமுறை யோவானுடைய சீஷர் இயேசுவினிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன? என்று கேட்டார்ர்கள் (மத். 9:14). யோவானின் தலைமைத்துவத்தில் இருக்கிற தங்களுக்கும், இயேசுவின் தலைமைத்துவத்தில் இருக்கிற சீஷர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். பரிசேயரின் பழக்கவழக்கங்கள் யோவானுடைய சீஷர்களோடு ஒட்டிக்கொண்டிருந்தன; எனவே, 'நாங்களும், பரிசேயரும்' என்று தங்களை அவர்களோடு இணைத்துக் கூறுகின்றனர். அதன் அர்த்தமென்ன? நாங்களும் பரிசேயரும் செயல்களில் ஒன்றுபோல இருக்கின்றோம்; ஆனால், உம்முடைய சீஷர்களோ எங்கள் இருவரைக் காட்டிலும் மாறுபடுகின்றனரே என்பதுதான். ஆனால், இயேசுவின் சீஷர்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பதை இயேசு அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். 'மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள் (மத். 9:15) என்றார் இயேசு. பரிசேயர்களோடு கூட இருக்கிற யோவானின் சீஷர்கள் செய்கிற உபவாசத்தை, மணவாளனோடு இருக்கின்ற தனது சீஷர்கள் செய்யவேண்டிய அவசியமில்லை என்பது இயேசுவின் பதிலாயிருந்தது. 'மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா?

யோவானுடைய சீஷர்களும், இயேசுவின் சீஷர்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பிறரைக் கவனித்துக்கொண்டேதான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இயேசுவின் சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான் (லூக் 11:1). யோவானின் சீஷர்கள் செய்வது போல தாங்களும் செய்யவேண்டும் என்ற விருப்பம் இயேசுவின் சீஷர்களிடத்தில் காணப்பட்டது. மணவாளன் உடனிருந்தபோதிலும், அவரோடு முகமுகமாக நேரடியாகப் பேசும் பாக்கியம் பெற்றிருந்தபோதிலும், 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்' என்ற இயேசுவை தங்களுடனேயே கொண்டிருந்தபோதிலும், அவர்கள் அடுத்தவர்களைத்தான் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் கால்கள் இயேசுவுடனே, கண்களோ யோவானின் சீஷர்கள் மேலே. யோவானின் சீஷர்கள் செய்வதைப் போன்று எல்லா காரியங்களையும் மணவாளனாகிய இயேசுவைக் கொண்டிருக்கும் நாம் செய்யவேண்டியதில்லை என்ற சிந்தைக்குத் தூரமாயிருந்தார்கள் அவர்கள். என்றாலும், பிதாவை நோக்கி ஜெபிக்கக் கற்றுக்கொடுத்து, தனது சீஷர்களைத் திருப்தியாக்கினார் இயேசு. என்றாலும், யோவான் ஜெபம் பண்ணப் போதித்தது போல அல்ல, இயேசு தாமாகவே அவர்களுக்குப் போதித்தார். யோவானின் சீஷர்கள் எப்படி ஜெபிக்கிறார்கள் என்பதை இயேசுவின் சீஷர்கள் பார்த்திருப்பார்கள், கேட்டிருப்பார்கள்; ஆனால், நீங்களோ அப்படிச் செய்யக்கூடாது, உடனிருக்கும் மணவாளனாகிய நான் சொல்லுகின்ற வண்ணமே ஜெபிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்.

இயேசுவோடு கூட நடந்துகொண்டிருக்கும் நாம், யாராது பிறரைப் பார்த்து 'இப்படிச் செய்யவேண்டும்' 'அப்படிச் செய்யவேண்டும்' என்று ஆசைப்படுகின்றோமா? நாம் எதற்காக அழைக்கப்பட்டவர்கள்? நாம் என்ன செய்யவேண்டியவர்கள் என்பதை மறந்துவிட்டு, பிற ஊழியர்கள் செய்துகொண்டிருப்பதைப் போன்று செய்ய முற்படுகின்றோமா? பிறரைப் பார்க்கும் கண்கள் நமக்கு வேண்டாம். நமது பாதையிலேயே தொடர்ந்து முன்னேறுவோம். இந்நாட்களில், ஊழியர்கள் மத்தியில் அழைப்பின் செயல்களை இடமாற்றும் செயல்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சுவிசேஷத்தினை அறிவிக்க அழைக்கப்பட்ட ஊழியர்கள், சபைகளை நடத்தும் போதகர்களைப் பார்க்கும்போது, அவர்களைப் போல தாங்களும் ஒரு சபையினை உண்டாக்கி உட்கார்ந்துகொண்டால் நலமாயிருக்குமே என்றும், தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டவர்கள் சபைகளைச் சந்தித்து தீர்க்கதரிசனங்களை உரைப்பதை விட்டுவிட்டு வேறு ஊழியத்திற்குத் திசை திரும்புவதும் அழைப்பின் செயல்களையே இடமாற்றம் செய்துவிடுகின்றன. அடுத்தவரின் அழைப்பினைத் தனதாக்கிக்கொள்ளும் ஆசை தன்னுடைய அழைப்பினை அழித்துவிடும் எச்சரிக்கை. எதற்காக அழைக்கப்பட்டீர்களோ அதையே செய்துகொண்டிருங்கள். அப்படிச் செய்யத் தவறி, அடுத்தவற்றின் மேல் நமது கண்களைப் பதிப்போமென்றால் நடக்கும் விபத்தையும் இயேசு கூறுகின்றார். ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார் (1கொரி 1:17) என்கிறார் பவுல், ஞானஸ்நானம் கொடுப்பதும், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் இரண்டும் தேவனுக்குப் பிரியமானவைகளே, தேவனால் கட்டளையிடப்பட்டவைகளே; அப்படிக் கட்டளையிடப்பட்டவைகளாக இருந்தவைகளிலும், தன்னுடையது எது? என்று தனது அழைப்பினைத் தெரிந்துகொண்டவர் பவுல்; இத்தகைய அறிவு நமக்கு உண்டா? 'மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்?' (லூக். 12:14) என்றார் இயேசு. இயேசு செய்த அற்புதத்தை மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்று அடையாளம் கண்டுகொண்டு, அவரை ராஜாவாக்க முயன்றார்கள். தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி தனியே மலையின்மேல் ஏறினார் (யோவான் 6:14,15). நம்முடைய அழைப்பிலிருந்து யாரும் நம்மைப் பிடித்துச் சென்றுவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம், அது பதவி உயர்வு அல்ல, பதவி இழப்பாக நமது வாழ்க்கையில் அமைந்துவிடும். 'நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ, அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் தொடர்கிறேன்' (பிலி. 3:12 என்ற பவுலின் வார்த்தைகளே நமக்கும் வழியாகட்டும்.

ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.(மத் 9:16,17)

அநேக ஊழியர்களின் துருத்திகள் (ஊழியங்கள்) கிழிந்துகிடப்பதற்குக் காரணம் இதுவே. செய்யக்கூடாதவைகளைச் செய்து நஷ்டத்தின் மேல் நஷ்டத்தினைச் சந்தித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் இதுவே; நீங்கள் அதற்கு அழைக்கப்பட்டீர்களா? யோசித்துப்பாருங்கள். பிரசங்கிக்கவும் அழைக்கப்பட்டவர்கள், அநாதை ஆசிரமம் நடத்துகிறேன் என்று சென்று தங்கள் துருத்தியினைக் கிழித்துப்போட்டார்கள். அப்படிச் செய்ததினால், ருசியான ரசமும் (தாலந்துகள்) சிந்திப்போய்விட்டது, யாருக்கும் பிரயோஜனமின்றி போய்விட்டது. ஊழியத்திற்கும் நஷ்டம், உனக்குக் கொடுத்த திறமைகள் மற்றும் தாலந்துகளும் நஷ்டம். இந்நிலை ஊழியர்களின் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும் ஏற்படக்கூடாது. எனவே பவுல், அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன் (1கொரி 7:20) என்று ஆலோசனையாக எழுதுகின்றார். உங்கள் அழைப்பிலே நிலைத்திருந்து, அடுத்தவiரின் செயலுக்கு ஆசைகொள்ளாமல், ஊழியத்தை தொடர்ந்து செய்தால், உங்கள் இரசம் சிந்தாமல் உலகத்தின் ஜனங்களுக்கு ருசியாகக் கிடைக்கும்.