எல்லாம் எங்களுடையது

 

நம்முடைய வாழ்க்கையில் யார் யாருக்கெல்லாம் பங்கு இருக்கின்றது என்பதைப் பற்றிய அறிவு நமக்கு அதியாவசியமானது. எல்லாம் எனக்குத்தான், இப்போது என்னுடன் இருப்பது அனைத்தும் எனக்கே சொந்தம், கண்ணால் காணும் என்னிடமில்hதவைகளும் எனக்குச் சொந்தமாகவேண்டும் என்ற சிந்தை உலகத்தின் மனிதர்களுடையது. நம்முடைய நேரத்தில், பணத்தில், இடத்தில், வாழ்க்கையில், வார்த்தைகளில் என நமதத்தனையிலும் தேவனுக்கும் பிறருக்கும் உள்ள பங்கினை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என்செவியைக் கவனிக்கச்செய்கிறார் (ஏசா 50:4). நம்முடைய வார்த்தைகளில் இளைப்படைந்தவனுக்குப் பங்கு கொடுக்கப்படவேண்டும். இதையே சாலமோன்,ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி 25:11) என்று சொல்லுகின்றார். யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன? என்ற மனோபாவத்தில், வழியில் சோர்ந்து கிடக்கும் மனிதர்களைக் கணக்கில் கொள்ளாமல், சமயத்திற்கேற்ற வார்த்தை யார் மூலமாகிலாவது தங்களுக்குக் கிடைக்காதா? என்று காத்துக் கிடக்கும் மனிதர்களுக்கு உங்கள் வார்த்தைகளில் பங்கு கொடுக்கப்படவேண்டுமே. இதையே, 'வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்' (மத். 25:36) என்று இயேசு குறிப்பிடுகின்றார்.

ஆசையே அழிவுக்குக் காரணம்; பேராசையே மனிதனை பேரழிவுக்குள் தள்ளிவிடுகின்றது. எதைக் காணும்போதும், அது எனக்கு வேண்டும் என்பது ஆசையல்ல, அது ஓர் இச்சையே. தங்களுக்கு இருப்பது போதும் என்ற மனமில்லாமல், அடுத்தவரதையும் அபகரிக்கும் மனப்பாங்கு இத்தகையோரின் மனதிலேயே எழுகின்றது. ஓரடி நிலத்திற்காகவும் உறவை முறித்துக்கொள்வதும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில்லாமல் விரோதியாகவே அவர்களைப் பாவிப்பதும். வைத்துக்கொள் என்று சொல்லத்தெரியாமல் வாழத்தெரிகின்ற ஆவிக்குரியவர்கள் அநேகர். உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரை பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ (மத். 5:40,41) என்ற இயேசுவின் போதனைகளை வெளிப்படுத்த பல்வேறு தருணங்கள் நமக்குக் கிடைத்தபோதிலும், தட்டிக்கழிக்கும் குணங்களே மேலோங்கி நிற்கின்றன. இயேசுவின் போதனைகள் வெளிப்படவேண்டிய நேரங்களில், மாம்சத்தின் போதனைகள்; வெளிப்பட்டு, நம்மை அடிமையாக்கிக்கொள்வதினால், எதிரே நிற்பவரை எதிரி என நினைத்து அவர்களோடு வழக்காடி வேதனையையும் வாழ்க்கையில் கூட்டிக்கொள்கிறோம். ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லையே (நீதி. 29:9). கிறிஸ்துவை அறியாத ஜனங்களிடத்தில் இத்தகைய நிலையினை நாம் சந்திக்கும்போதோ அல்லது கிறிஸ்துவை அறிந்தவர்களிடத்தில் இத்தகைய நிலையினை நாம் சந்திக்கும்போதோ சறுக்கி வீழ்ந்துவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்வதுதான் நமது முதற்பணியாக இருக்கட்டும். சத்துருவை எதிர்கொள்ள பெலனில்லாமல் பறித்துக்கொள்ள விட்டுவிடுவதைக் குறித்து வேதம் போதிக்கவில்லை, மனதார சத்துருவுக்கு விட்டு விடுவதையே வேதம் போதிக்கின்றது. எல்லாம் எங்களுடையது என்று நினைக்கும் மக்கள் சத்துருவுடன் போராடிக்கொண்டேயிருப்பார்கள்; தங்களுடையதை சத்துரு எடுக்கும்போது சண்டையிட்டாகிலும் திரும்பப் பெற்றுவிடவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுடையதை விட்டுவிட அவர்களுக்கு மனதிருக்காது. ஆனால், இயேசுவோ சத்துரு வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தால், வஸ்திரத்தை மாத்திரமல்ல அங்கியையும் விட்டுவிடு என்று போதிக்கிறார்.

சத்துரு பறித்துக்கொண்டுபோகும்போதே விட்டுவிடு என்று சொல்லும் தேவன், சகோதரன் கேட்கும்போதும் கொடுத்துவிட ஆலோசனை சொல்லுகின்றாரே. தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!(ஏசா 5:8) என்றான் ஏசாயா தீர்க்கதரிசி. நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவி 19:9,10) என்றவரின் மனதைப் புரிந்துகொள்ளுவோம்.

எல்லாவற்றையும் தங்களுடையதாக்கிக்கொள்ள நினைத்த மனிதர்களைக் குறித்து இயேசு ஓர் உவமையினைச் சொன்னார். ஒரு மனுஷன் தான் உண்டாக்கின தனது திராட்சத் தோட்டத்தை, மற்றொரு தோட்டக்காரனுக்கு குத்தகையாக விட்டு நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான் (லூக். 20:9). பருவகாலம் வந்தபோது, தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி ஊழியர்களை அனுப்பினார்; ஆனால், அவர்களோ வந்தவர்களை வெறுமையாக அனுப்பிவிட்டார்கள் (லூக். 20:10,11). மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை எஜமான் அனுப்பியபோதிலும், அவர்களைக் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள் (லூக். 20:12). தன் குமாரனை அனுப்பியபோதிலும் அவனைக் கொன்றுபோட்டார்கள் (லூக். 20:15). இதை அத்தனைக்கும் காரணம் அவர்கள் தோட்டத்தை தங்களுடையதாக்கிக்கொள்ள நினைத்ததே. பத்சேபாளை தன்னுடையவளாக்கிக்கொள்வதற்காக தாவீது அவள் கணவனான உரியாவை கொலை செய்தானே. ஆகாப் ராஜா நாபோத்தை நோக்கி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு என்று கேட்டான். நாபோத் கொடுக்க மறுத்தபோது, ஆகாபின் மனைவி யேசபேல், உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்ற பொய்சாட்சியினை ஏற்படுத்தி, அவனை கல்லெறிந்து கொன்றாள். அடுத்தவனுடையதை அபகரிக்கவேண்டும் என்று நினைத்த இவர்களின் செயல் கொலையில் முடிந்ததல்லவா.

நம்மிடத்தில் வந்து நிற்கும் மனிதர்களை நாம் எப்படி அனுப்புகின்றோம்? அவர்களுடைய பங்கைக் கொடுத்தா அல்லது வெறுமையாகவா? உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே (மத் 5:42). அவர்களை அனுப்புகிறவர் நமது எஜமான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தேவனும் மனிதனும் இணைந்ததே மனித வாழ்க்கை. மனிதனுக்கு மாத்திரம் நாம் சொந்தமல்ல, தேவனுக்கும் நாம் சொந்தமானவர்கள். தனக்கானவைகளை மாத்திரமே செய்து மரிக்க அல்ல, தேவனுக்கானவைகளையும் செய்ய நியமிக்கப்பட்டவன் மனிதன். ஆனால், இத்தகைய நிலையிலிருந்து நாம் பின்வாங்கிவிடக்கூடாது. இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று இயேசுவினிடத்தில் கேட்டபோது, 'இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்' (மத். 22:17,22) என்றார் இயேசு. ஏதோ ஒரு புறம் மாத்திரம் செயலாற்றிக்கொண்டேயிருப்பவர்களாக நாம் காணப்படக்கூடாது. இயேசு வேதபாரகரையும், பரிசேயரையும் நோக்கி: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே (மத் 23:23) என்றார். போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது? என்று நியாயசாஸ்திரி ஒருவன் இயேசுவைச் சோதிக்கும்படி கேட்டபோது, இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் (மத் 22:37-40). நம்முடைய வாழ்க்கையில் பிறருக்கு இருக்கும் பங்கைப் புரிந்துகொள்ளுவோம்.

ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.(எசே 18:7-9)

நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். (நெகே 8:10)