நின்றே வென்ற நீதிமான்

 

ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்;க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள். (நீதி 28:1)

பிரியமானவர்களே! நாம் பெலமிழந்தவர்கள் அல்ல; பெலமுள்ளவர்கள்; நமக்குள் வாழும் கிறிஸ்துவினாலேயே அந்தப் பெலன் நமக்குக் கிடைக்கிறது. வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால், பிதாக்களே நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்களை ஜெயித்ததினாலும், பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து அவர்களை ஜெயித்ததினால் (1யோவான் 2:13,14; 4:4) என்று தேவப் பிள்ளைகளின் வாழ்க்கையில் காணப்படும் தேவ பெலத்தைக யோவான் குறிப்பிடுகின்றார். 'உலகத்திலிருக்கிறவனிலும் நம்மிலிருக்கிறவர் பெரியவர்' என்பதே நமது வெற்றிக்குப் பிரதான காரணம் என்பதையும் யோவான் சுட்டிக்காட்டத் தவறவில்லை. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலன் உண்டு (பிலி. 4:13) என்பது பவுலின் அறிக்கை. நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான் (யோபு 17:9) என்பது யோபுவின் அறிக்கை. பாளையமிறங்கியிருந்த இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் கண்டபோது, 'காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு' (எண். 23:22) என்று வாக்குரைக்கிறான்.

தங்களுக்கு இருக்கும் பெலத்தை அறியாத மனிதர்களே பயந்து ஓடுகின்றார்கள். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ. 1:7). இதை உணர்ந்த சங்கீதக்காரன், 'தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது' (சங். 46:5) என்றும், 'நீதிமான் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்' என்றும் நீதிமானின் பெலத்தை பாட்டாகப் பாடுகின்றான். 'நீதிமான்களுடைய வேரோ அசையாது' (நீதி. 12:3). பெருமழை சொரிந்தாலும், பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து நம்மேல் மோதினாலும் கன்மலையின் மேல் நிற்கும் நீதிமான்களின் வீடு விழுவதில்லை (மத். 7:25). அவர் நம்முடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, நமது அடிகளை உறுதிப்படுத்துகிறவராயிற்றே (சங். 40:2). நம்முடைய பெலம் இத்தனை பெரியதாயிருக்க, இயேசுவை ஏற்றுக்கொண்ட நமக்குள் இருக்கும் பெலத்தைப் பார்க்கக்கூடாதபடி பல நேரங்களில் சத்துரு நம்மை வஞ்சித்துவிடுகின்றான், நமது கண்களை திசை திருப்பிவிடுகின்றான். நாம் ஓடி சுகமாகத் தங்கிக்கொள்ள கர்த்தரின் நாமம் நமக்கு உண்டே (நீதி. 18:10), இந்தப் பாதுகாப்பு இல்லாத துன்மார்க்கர்கள் எங்கு ஓடித் தப்புவார்கள்? தேவனுடைய பிள்ளைகளான நாம் நிற்கிற இடத்திலேயே அசையாமல் நின்றுகொண்டு தப்பிக்கொள்ளலாம், ஆனால், துன்மார்க்கர்களோ ஓடினாலும் தப்பமுடியாது.

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான். எசேக்கியா ராஜா அதை அறிந்தபோது, அசீரியா ராஜா தன் தேசத்திற்குள் வந்துவிடாதிருக்கும்படியாக, நகரத்துக்குப் புறம்பே இருந்த தண்ணீர் நிலைகளை எசேக்கியா தூர்த்துப்போட்டான். மேலும் எசேக்கியா தன் ஜனங்களை நோக்கி: நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான் (2 நாளா. 32:1-7). எதிரியைக் கண்டு கலங்கிவிடாமல், தைரியமாயிருக்கவேண்டியதே முதற்படி. பயந்துபோனால் சத்துரு பாய்ந்து பிடித்துக்கொள்ளுவான், நம்மை பீறிட்டுப்போடுவான். தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோனாலும், நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் (ஏசா 59:19) என்ற விசுவாசம் நமது வாழ்க்கையை விட்டு எந்நேரமும் அகலக்கூடாது. மலையைப் பார்த்து பேசும் போது கடுகளவு விசுவாசம் இருந்தால் பரவாயில்லை (மத். 21:21), ஆனால், கர்த்தரின் மேல் முழு விசுவாசம் நமக்குத் தேவை. தேவனிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் நாம் அன்புகூரவேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை (மத். 22:37). முழு இருதயத்தோடும் நாம் விசுவாசித்தால் நமக்குத் தடைகள் இருக்கப்போவதில்லை (அப். 8:37).

எரிகோ கோட்டை விழவேண்டும் என்று நாம் சுற்றிவருவதைப்போல, நம்முடைய ஆவிக்குரிய கோட்டை விழவேண்டும் என்று சத்துரு நம்மைச் சுற்றிவருகின்றான். நமக்கு விரோதமானவைகளைப் பேசி, விரோதமாய் ஜனங்களை எழுப்பி, வழக்குகளை மூட்டி, கோள் சொல்லி தனது பற்களுக்கு இறையாக நம்மை மாற்றத் துடிப்பவனே சத்துரு. எனினும், நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. அவர்கள் நாவு நமக்கு விரோதமாக நாடகமாடலாம், ஆனால் தேவனோ நம்மை அவர்கள் பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பதில்லை (சங் 124:6). நமக்கு விரோதமாக நாடகமாடும் நாவுகளுக்கே நியாயத்தீர்ப்பு செய்கிறவர் அவர். நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும், கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் (சங். 31:18) கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும். துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கும்போது, ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார் (சங். 37:12,13). நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்த முயன்றாலும், கர்த்தரோ நீதிமானுக்கு அடைக்கலமாயிருக்கிறார், நீதிமானுக்குக் கன்மலையாயிருக்கிறார் (சங். 94:21,22). கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறதே (1பேதுரு 3:12).

நம்மைக் குறித்த தேவையில்லாதவைகளை ஜனங்கள் பேசத் தொடங்கும்போது, பொய்யாய் செய்திகளைத் தூற்றித் திரியும்போது அவர்களுடைய பற்களுக்கு நாம் இறையாகிவிட்டதைப் போன்ற உணர்வினை நமக்குள் உண்டாக்கி, அப்படிப்பட்டவர்களோடு போராடவேண்டும் என்ற உணர்வையும் நமக்குள் உருவாக்க விரும்புகிறவன் சத்துரு. அவனுடைய சதிக்குள் சிக்கிக்கொண்டால், சத்துருவோடு சண்டையிட நமது பார்வையைத் திருப்பிவிடுவோம். நாம் அவர்களுடைய பற்களுக்கு இறையாக ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்வது அவசியம். சிங்கங்களுக்கே தானியேலை ஒப்புக்கொடுக்காதவர், மனிதர்கள் கையிலே நீதிமான்களை மாட்டிக்கொள்ளச் செய்வாரோ. சத்துருவின் வாயில் நமது ஜீவனை பறிகொடுப்பதற்காக, இயேசு தனது ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்கவில்லை; தம்மோடு கூட வைத்துக்கொள்ளவே மீட்டெடுத்தார். யாரோ எதையோ நமக்கு விரோதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் பயந்து ஓடிப்போய்விடக்கூடாது. 'இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்' (மத். 21:44) என்பதை நின்று நிரூபிக்கவேண்டியவர்கள். தேவையான கற்களாகிய உங்களை ஆகாத கற்களைப் போன்றும் (சங். 118:22), சபையைக் கட்டப் பயன்படப்போகிற கல்லாகிய உங்களை வேண்டாம் என்றும் (மத். 16:18) ஜனங்கள் தள்ளிவிடும்போது, ஒதுக்கிவைக்கும்போது, நீங்கள் ஓடிவிடவேண்டாம்; அவர்கள் உங்களை வைக்கும் இடத்திலிருந்து ஒளிவீசிக்கொண்டிருங்கள்; உதிக்கிற உங்கள் ஒளியினிடத்திற்கு ராஜாக்கள் வரும் காலம் வரும். உங்கள் அழைப்பிலே உறுதியாயிருங்கள், தேவனுடனான உறவை தொடர்ந்து பெலனாகக் கொள்ளுங்கள், சத்துருவின் அக்களிப்பினைக் காணாமல் உங்கள் அபிஷேகத்தில் களிகூறுங்கள். நீங்கள் தேவனால் உண்டானவர்களாயிருந்தால், உங்களை ஒழித்துவிட எவராலும் கூடாது (அப். 5:39). துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார் (சங். 37:17). கர்த்தரே நீதிமான்களுக்கு அடைக்கலம் (சங். 37:39).