உப்புத்தூண்கள்

 

வாழ்க்கை நிறைவாக இருக்கும்போதும், நன்மையானவைகள் நடக்கும்போதும், ஆசீர்வாதங்கள் அடுக்கடுக்காய் வந்து குவியும்போதும் கர்த்தர் கரம் பிடித்திருக்கிறார் என்ற உணர்வு நமக்குள் வேரூன்றி நிற்கிது. ஆனால், அதே வாழ்க்கையில் வெற்றிடமும், வெறுமையும் வந்து சேரும்போது, தோல்விகள் தொடர்ந்து நம்மைத் தொற்றிக்கொள்ளும்போது உடனிருக்கும் கர்த்தரை உணர இயலாதவர்களாக நாம் மாறிவிடக்கூடாது. அருகில் இருக்கின்ற கர்த்தரைப் பற்றிய அறிவு இல்லாமல் வாழ்கிறது ஒரு கூட்டம். அறிவித்தாலும் அந்த அறிவினைப் பெற்றுக்கொள்ளாமல், தாங்கள் நிற்கும் நிலையிலேயே நின்றுகொண்டிருக்கின்றனர் பலர். 'நான் பிடித்த முடிலுக்கு முன்றுகால்தான்' என்ற பழிமொழிற்கேற்ப, விக்கிரகங்களை விட்டு வெளியேற மனதில்லாமல் அதனையே தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். தாங்கள் செய்துகொண்டிருப்பதே சரி என்ற மனதுடன் உறுதியாயிருக்கும் அவர்கள் சரியானதையும், மெய்யானதையும் இழந்துவிடுகின்றனர். அவர்கள் தங்கள் சுய ஞானத்திலேயே நின்றுகொண்டிருப்பதால், தேவனை அறியாதிருக்கிறார்கள் (1கொரி. 1:21). அவர்களது பொய்யான வாழ்க்கை மெய்யான தேவனிடமிருந்து அவர்களை தூரப்படுத்திவிடுகின்றது. ஆராதனை செய்யவேண்டுமென்ற விருப்பம் உண்டு, ஆனால் யாரை ஆராதிக்கவேண்டும் என்று அறிந்துகொள்ளவோ விருப்பமில்லை (அப். 17:23). இதுவே அநேக ஜனங்களின் நிலை. 'ஆராதனையோடு மாத்திரமே அவர்கள் வாழ்க்கை நின்றுவிடுகின்றது.' எதை வேண்டுமென்றாலும் ஆராதிப்பார்கள் இவர்கள், மரத்தையோ, விலக்கையோ, பறவையையோ, சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ, மண்ணையோ, மனிதனையோ, தங்கள் மூதாதையர்களையோ, பாம்புகளையோ என எதை வேண்டுமென்றாலும் ஆராதிப்பார்கள் இவர்கள். எதையாவது வணங்கிவிட்டால், இறைவனைத் தொழுதுவிட்டோம் என்ற திருப்திக்குள் சிக்கிக்கொள்கின்றனர். இவர்கள், 'ஆராதனையை அறிந்து, ஆண்டவரை அறியாதவர்கள்'.கிறிஸ்துவை அறியாத உப்புத்தூண்கள் இவர்கள்.

ஆனால், ஆராதனையில் பங்கெடுத்து ஆண்டவரையோ அகத்தில் ஏற்றுக்கொள்ளாத ஜனங்கள் கிறிஸ்தவர்களிலும் உண்டு. கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் சொல்லப்பட்டாலும் அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவே. தின ஆராதனையிலும், ஞாயிறு ஆராதனையிலும், கூட்டங்களிலும் பங்கேற்கும் இவர்கள் 'ஆராதனையில் மாத்திரம் அங்கம் வகிப்பதை ஆண்டவரைத் தொழுதுவிட்டதாக நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள்.' இப்படிப்பட்ட உப்புத்தூண்களாக ஆலயத்தில் ஆராதனையில் பங்கேற்கும் மக்கள் அநேகம் பேர். ஆராதனையுடனும், ஆண்டவருடனும் இணையாத பட்சத்தில், ஆராதிக்கும் நீங்கள் ஆலயத்தில் நிற்கும் உப்புத் தூண்களே என்பதை மறந்துவிடவேண்டாம். ஆலயத்திற்குள் நின்றுகொண்டிருந்தபோதிலும், ஆராதனையில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோதிலும் பின்னோக்கிப் பார்க்கக்கூடாதவைகளையே பார்த்துக்கொண்டிருப்பதால் பலன் என்ன? ஆண்டவருடன் தொடர்பின்றி, ஆராதனையில் மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கும் மக்கள் உப்புத்தூண்கள். இத்தகையோர், கிறிஸ்துவை அறிந்த உப்புத்தூண்கள். இவர்களால் கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படும். ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.(ரோம 2:29)

மற்றொரு சாரார், கர்த்தரால் பெற்ற ஆசீர்வாதங்களோடேயே அடங்கிப்போகிறவர்கள், நின்றுவிடுகின்றவர்கள். ஆண்டவரிடமிருந்து தாங்கள் விரும்பிய ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், தொடர்ர்ந்து அவரைப் பற்றிக்கொள்ளவும், பின்செல்லவும் மனதற்றோராக, கிடைத்தது போதும் என்ற மனநிலையோடு நின்றுவிடுகின்றனர். இவர்கள், ஆசீர்வாதத்தை பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூணாகிப்போனவர்கள். பெற்ற வெற்றியையும் அவருக்காக வெற்றிடமாக்கி, அவருக்குப் பின் வீறு நடைபோடும் வீரர்களாக நாம் மாறவேண்டும். நஷ்டத்தை இயேசுவைக் கொண்டு லாபமாக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம், ஆனால், லாபத்தை அவருக்காக நஷ;டமாக்கவும் நம்மில் விருப்பம் வேண்டும். பவுல் தனது வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்பு இதுவே. எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி 3:7,8) என்பதுதான் அவர் கிறிஸ்துவில் நிலைத்து நின்றதற்கான அஸ்திபாரத் தூண். தொடர்ந்து லாபமடைந்துகொண்டிருப்பதே தேவன் தங்களுடன் இருப்பதற்கான அளவுகோல் என்று பலர் நினைக்கின்றனர். லோத்துவின் மனைவி சோதோமை பின்னிட்டுத் திரும்பிப் பார்த்தது போல, லாபத்தையே பின்னிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 'லாபமே அவர்களது உப்புத் தூண்' அதனை விட்டு ஓட அவர்களால் கூடாமற்போய்விடுகின்றது. அவர்களது ஓட்டம் லாபத்தோடு நின்றுவிடுகின்றது. மற்றொரு வழியில் சொல்லப்போனால், எங்கெங்கெல்லாம் தங்களுக்கு லாபம் கிடைக்குமோ அங்கெங்கெல்லாம் அவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் (யோபு 1:21) என்று யோபுவைப் போல சொல்ல அறியாதவர்கள். பயணத்தில் தொடர்ந்து ஓடமுயாமல், லாபமே அநேகரை இடறச் செய்கிறது.

சுகம் இருக்கும்போது, கஷ்டப்படுவதைத் தெரிந்துகொள்வதா? நல்லதோர் வாழ்க்கை இருக்கும்போது அதனை விட்டுப் பிரிவதா? என்ற பலவிதமாக உள்ளத்தில் எழும்பும் கேள்விகளுக்கு 'வேண்டாம்' என்று விடையளித்து ஆண்டவரையே விட்டுவிடும் ஆபத்தினை நோக்கி அவர்கள் பயணிக்கின்றனர். சுவிசேஷத்தைச் சுமந்து வந்த மிஷனரிகள் பலர் தங்கள் சொந்த நாட்டையும், சொத்துக்களையும், சுகத்தையும் துறந்து அழைப்பை மறந்துவிடாமல் இந்த மண்ணில் பணி செய்ததால் அல்லவோ நம்முடைய கரங்களில் இன்று வேதம் தவழ்கின்றது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே (2கொரி 8:9) இதனை நாம் மறந்துவிடலாகுமோ. நம்மை ஐசுவரியவான்களாக்கும்படி தன்னைத் தானே வெறுமையாக்கிக்கொண்டவரே நமது இயேசு. பாவிகள் நமக்காக பரலோகத்தின் சுகத்தைத் துறந்தவர். கிறிஸ்துவுக்காக தங்கள் லாபத்தை நஷ்டமாகக் கருதிய மனிதர்களின் வாழ்க்கையில் கர்த்தர் கிரியை செய்கிறார். முழு நேர ஊழியத்திற்கென்று தங்களை ஒப்புக்கொடுத்த பலர், நல்லதோர் வேலை கிடைத்ததும் அந்த லாபத்தை விட்டு வெளியேற மனதில்லாமல் மௌனமாகிவிடுகின்றனர். நல்ல சம்பளம் கிடைத்தால் கர்த்தருக்காக அதிகம் செய்வேன் என்று அர்ப்பணித்தவர்கள், உயர்ந்த அந்தஸ்தைப் பெறும்போது, வருமானம் அதிகம் வரும்போது சுகபோகத்தையே தேடிச் செல்கின்றனர், கர்த்தருக்குக் கொடுப்பதைக் குறைத்துக்கொள்கின்றனர். லாபத்தோடு ஒட்டிக்கொண்ட உப்புத்தூண்கள் இவர்கள்.