காலியான படகிலே கர்த்தர்

 

ஒன்றுமில்லாத நிலையில், எதுவுமற்று ஏமாந்து நிற்கும் வேளையில், இருக்கவேண்டியது கூட இல்லாமல் தவிக்கும் சூழ்நிலையில், தேவன் எங்கே இருக்கிறார்? என்பது பலரது கேள்வி. ஒன்றுமில்லாதிருக்கும் நேரத்தில், அவரையும் இல்லாதவராக நினைத்துக்கொள்ளும் நினைவு உள்ளத்தில் உருவாகத்தொடங்குகின்றது. அவரைக் காண நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தேடுகிறது பலரது விழி. இந்தச் சூழ்நிலையில் திசை இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார் (யோபு 23:8-10) என்று தேவனது இருப்பிடத்தை சரியாகத் தெரிந்துவைத்திருந்தான் யோபு. அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவராயிற்றே. குழந்தையே இல்லாதிருக்கும்போது, ஆபிரகாமை அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினவராயிற்றே (ரோமர் 4:17). உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார் (1கொரி. 1:28). தேவன் தெரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்குள்ளே என்ன இருக்கிறது? என்ற கேள்வி உங்களுக்குள்ளே உருவானது உண்டா? காலியான படகைப் போல கரையிலே நின்றுகொண்டிருக்கின்றீர்களா? நீங்கள் நிற்கும் அதே கரையில்தான் இயேசுவும் நின்றுகொண்டிருக்கின்றார்; கவலை வேண்டாம். நாம் இருக்கும் இடத்திலே அவர் இருப்பார்; நாம் நிற்கும் இடத்திலே அவர் நிற்பார்; நாம் புறப்படும் நேரத்தில் நம்மோடு புறப்படுவார்; அவர் நம்மை விட்டு விலகுவதும் இல்லை, நம்மைக் கைவிடுவதும் இல்லை (உபா. 31:6). எந்த நிலையிலும் தேவனுக்கும் நமக்கும் இடையிலான இந்த நிலை மாறுவதில்லை.

அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம் (2கொரி 6:9,10) என்கிறார் பவுல். ஒன்றுமில்லாத ஒருவன், எல்லாம் இருக்கிறது என்று சொல்வது சாத்தியமா? பிரியமானவர்களே, அவர் உடனிருந்தால், அனைத்தும் உடனிருக்கிறது இதுவே சத்தியம்.

இயேசு கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படவுகளை இயேசு கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.(லூக் 5:1-3)

முந்திய இரவிலே மீன் ஒன்றும் கிடைக்காததினால் விசிய வலைகளில் சிக்கியிருந்தது பாசிகளை அகற்றிக்கொண்டிருந்தனர் மீனவர்கள். இராமுழுவதும் பட்ட அவர்களது பிரயாசம் வீணாகியிருந்தது. என்றாலும், தொடர்ந்து பிரயாசப்பட அவர்கள் ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். கடலிலே மீன்கள் இருக்கின்றன; ஆனால், வலையில்தான் அகப்படவில்லை என்ற எண்ணம் அவர்களில் இருந்தது. தங்கள் வலையில் அகப்படவில்லை என்பதால், கடலில் மீன்களே இல்லை என்ற எண்ணம் அவர்களுக்குள் உண்டாகவில்லை. முயற்சிகள் அனைத்தும் தோல்விதான், ஆனால் அவைகள் அவர்களது அது முன்னேற்றத்தை நிறுத்திவிடவில்லை. தோல்வியிலே இடறும் மக்களின் பயணம் தோல்வியைத் தாண்டி தொடராமற்போய்விடுகின்றது. 'என்னிடத்திலே இல்லை, ஆனால் கடலுக்குள்ளே இருக்கிறது' என்ற இந்த எண்ணம்தான் மறுமுறையும் வலைவீச அவர்களுக்கு விருப்பத்தைக் கொடுத்தது. அத்தகையை இருவரையும் அவர்களைச் சார்ந்த படகுகளையும் இயேசு கண்டார். ஒருபுறம் தேவ வசனத்தைக் கேட்க நெருங்கி நிற்கும் மக்கள், மற்றொருபுறம் தேவையோடிருக்கும் இரு படகுகள். இவ்விரண்டையும் இணைக்கும் இயேசுவின் தன்மை அதிசயிக்கத்தக்கது. தேவையோடிருப்பவர்களையும், தேவவசனத்தைக் கேட்க நெருக்குபவர்களையும் ஒரே நேரத்தில் சந்தித்தார் இயேசு. காலியாக இருந்த அந்தப் படகிலே இயேசு ஏறி பிரசங்கித்தபோது, 'அது காலியானது' என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியவந்திருக்கும். காலியாக நின்ற அந்தப் படகுதான் இயேசு நிற்பதற்கும், உட்காருவதற்கும், இடையூறு இல்லாமல் பிரசங்கிப்பதற்கும் ஏற்றதாயிருந்தது. நிறைந்த படகுகளில் இயேசுவுக்கு குறைந்த இடமே கிடைக்கிறது, குறைவான படகுகளிலோ இயேசுவுக்கு நிறைவான இடம் கிடைத்தது. நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுவே. குறைவுபடும்போது இயேசுவை கூப்பிட்டுக்கொண்டேயிருக்கின்றோம், நிறைவாயிருக்கும்போது கூப்பிடுதல் குறைந்துவிடுகின்றது. காலியான நிலையில், தோல்வியுற்ற நிலையில் இருக்கும்போது, அவர் செயல்படுவதற்கு அதிகமான இடம் நமது வாழ்க்கையில் இருக்கின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

நம்முடைய வீட்டிலிருந்து யாருக்காவது உணவுப் பொருட்களை பாத்திரங்களில் கொடுத்து அனுப்பும்போது, அந்தப் பாத்திரங்களை வெறுமையாய் அவர்கள் திரும்பத் தராமல், ஏதாவது உணவுப் பொருள்களைப் போட்டு திரும்பத் தருவதுபோல, போதகத்திற்கு மாத்திரம் பேதுருவின் படகினை இயேசு பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் அதனைக் காலியாக அவனிடத்தில் கொடுக்கவில்லை; மீன்களால் நிறைத்துக் கொடுத்தார். அவனது படகை மாத்திரமல்ல, அதனுடன் நின்றுகொண்டிருந்த மற்றொரு படகையும் மீன்களால் நிறைத்தார். பேதுருவின் படகு ஆழத்திற்கு சென்று இயேசுவுடன் மீன்களை அள்ளிக்கொண்டிருந்தபோது, மற்றொரு காலியான படகில் உள்ளவர்கள் கரையிலிருந்து அந்நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள். இரண்டு படகுகள் நிரம்பத்தக்கதாக மீன்களைக் கொடுத்து, அந்தப் படகையும் ஆழத்திற்கு வரச் செய்தார் இயேசு. ஆம், அவர் பட்சபாதமுள்ளவர் அல்லவே!

நம்மை ஆசீர்வதிப்பது நம்மை அழைப்பதற்கே. இயேசு அந்த இரண்டு படகுகளில் இருந்த மீன்களைக் குறித்து கரிசனை கொள்ளாமல், படகுகளை வைத்திருந்த மனிதர்களை சீஷர்களாக மாற்றிக்கொள்வதிலேயே கண்ணோக்கமாயிருந்தார். அழைப்பை மறந்துவிட்டு, இயேசுவை கரையில் கொண்டுபோய் இறக்கிவிட்டு மேலும் ஆழத்தி;ற்குச் செல்ல முற்படக்கூடாது. திரும்பிப்போனவர்கள் பலர் திரும்பி வந்ததே இல்லை. அழைக்கப்பட்ட பலர் அமிழ்ந்துபோனதற்கு இதுவே காரணம். முதல்முறை இயேசுவோடு சென்றபோது இரண்டு படகுகள் அமிழத்தக்கதாக மீன்கள் கிடைத்ததை மனதில் கொண்டு, அழைக்கப்பட்ட பின்பும் மீண்டும் புறப்படுவோர் புயலின்போது தட்டியெழுப்பக்கூட தங்கள் படகில் இயேசு இல்லாத நிலைக்குள்ளாகி தடுமாறுகின்றனர். ஐயரே, ஐயரே என்று கூப்பிட இயலாமல், ஐயோ, ஐயோ என்று கூப்பாடுபோடுகின்றனர். இன்றைய நாட்களின் நிலை என்ன? ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்களின் ஆசீர்வாதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அவர்களையோ மீண்டும் மீன் பிடிக்கவே அனுப்பிவிடுகின்றனர் ஊழியர்கள். அவர்களது படகில் இருக்கும் மீன்களையே வாங்கிக்கொண்டிருக்கின்றனர், படகை வைத்திருப்பவர்களையோ விட்டுவிடுகின்றனர். 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா' என்று சொன்னால், இழப்பு தங்களுக்கே என்பதை அறிந்த ஊழியர்கள் அவர்கள். அவர்கள் அப்படிச் செய்தால், தங்களுக்குக் கிடைக்கும் பங்கு கிடைக்காமற்போய்விடும் என்பதுதான் அத்தகையோரின் குறிக்கோளாயிருக்கும். காலியான படகுகளையெல்லாம் இத்தகைய ஊழியர்கள் காண்பதில்லை, அவர்கள் கண்களில் படுவதுமில்லை. ஏழைகள் பலர் ஊழியர்களால் ஒதுக்கப்படுவதற்கும், பணக்காரர்கள் ஊழியர்களால் மேடைகளில் ஏற்றப்பட்டு புகழப்படுவதற்கும் காரணம் இதுவே. இவர்கள் நிறைவான படகுடனேயே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.