சமாரியன் என் சகோதரன்

 

தவறு செய்தவர்களைக் கண்டு தலைமுறை தலைமுறையாக நாம் ஒதுங்கிச் செல்லுவோமென்றால், பின் நாட்களில் ஒரு மாபெரும் ஜனக்கூட்டத்தையும், அவர்களது சந்ததியாரையுமே நாம் இழந்து நிற்கும் நிலை உருவாகும். தவறியவர்கள் சரிசெய்யப்படவேண்டியவர்கள்; தவறியவர்கள் மீண்டும் சந்திக்கப்படவேண்டியவர்கள்; தவறியவர்கள் மீண்டு வரவேண்டியவர்கள். இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, பாவிகளாக வாழ்ந்த மனிதர்களைக் கண்டு விலகியே வாழ்ந்திருப்பாரென்றால், அவர் வந்திருந்ததின் நோக்கம் நிறைவேறியிருக்காதே. 'நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்' (மத். 9:13) என்றார் இயேசு. இதை உணராக வேதபாரகரும் பரிசேயரும் 'அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்ன?' என்று கேட்டார்கள் (லூக். 5:30). அதுமாத்திரமல்ல, இயேசுவை 'பாவிகளுக்கு சிநேகிதன்' (மத். 11:19) என்றும், 'பாவியான மனுஷன்' (யோவான் 9:16) என்றும் பேசினார்கள். இயேசு யாருக்காக வந்தார், எதற்காக வந்தார் என்பதை அறியாத மக்கள் எழுப்பும் கேள்விகள் இப்படித்தான் இருக்கும். பாவிகள் இயேசுவைத் தொடுவதைக் கூட விரும்பாதவர்கள் அவர்கள் (லூக். 7:39). ஆனால், இயேசு தான் காட்டிக்கொடுக்கப்படும் வேளையில், 'இதோ மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது' (மத். 26:45) என்று சொன்னபோது, அந்தப் பாவிகளின் பட்டியலில் இருந்தவர்களோ, பிரதான ஆசாரியனும் மற்றும் ஜனத்தின் மூப்பர்களும் அனுப்பின கூட்டத்தினரே (மத். 26:47). தங்களுடைய பாவங்களை மறந்து, பாவிகளை முற்றிலும் வெறுத்து வாழ்ந்தவர்கள் இவர்கள். இயேசு பாவங்களை வெறுக்கிறவர் பாவிகளை வெறுக்கிறவர் அல்ல என்பதை அறியாதவர்கள் இவர்கள்.

சமாரியர்கள் யூதர்களால் வெறுக்கப்பட்டவர்கள். உம்ரி என்னும் அரசன் இஸ்ரவேலை ஆண்டபோது, சேமேரின் கையிலிருந்து சமாரியா என்னும் மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கினான். அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு அந்த மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே 'சமாரியா' என்று பெயரிட்டான் (1இராஜா 16:24). உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தவன், கேடாக நடந்தவன் (1இராஜா 16:25). சமாரியாவை அவன் கட்டினதோடு மாத்திரமல்லாமல், அரசாட்சிக்குத் தலைமையிடமாகவும் அதனை மாற்றிக்கொண்டான். உம்ரியின் மகனான ஆகாப் சமாரியாவிலே பாகாலுக்கு கோயிலைக் கட்டினான் (1இராஜா. 16:32). சமாரியாவில் மேடைகளும் கோயில்களும் நிறைந்திருந்தன (1இராஜா. 13:32). அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள் (2இரா 17:7,8). சமாரியர்கள் புறஜாதியாரோடு கலந்திருந்தனர். புறஜாதி பெண்களை மணமுடித்ததினாலும், அவர்களுடைய பழக்கவழக்கங்களை அப்பியாசப்படுத்தியதினாலும் யூதர்கள் அவர்களை விலக்கிவைத்தனர்.

இயேசு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள் (லூக் 9:52). அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்னார்கள்; இதைக் கண்ட இயேசுவின் சீஷர்களாகிய யாக்கோபும் யோவானும் தங்கள் கோபத்தை அவர்கள் மீது கொட்டிவிட நினைத்தார்கள். இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?' என்று கேட்டார்கள் (லூக். 9:54). இயேசு சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள் (லூக் 9:56). சீஷர்களின் இந்த குணத்தினை இயேசு கண்டுகொண்டதினாலேயே, சீஷர்களின் இந்த அவசர குணத்தையும், அழிக்கும் குணத்தையும் கண்ட இயேசு அவர்களை ஊழியத்திற்கு அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் (மத் 10:5,6) என்றார்.

எனினும், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் (அப். 1:8) என்று சொன்னார். பரிசுத்த ஆவியின் பெலத்தைப் பெறாமல் புறஜாதிகளிடத்தில் சீடர்களை அனுப்பினால், புறஜாதியாரின் செயல்களைக் காணும் சீடர்களால் அவைகளைத் தாங்கிக்கொள்ளவும், அவர்களிடத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் பெலனற்றவர்களாக கோபமுற்றவர்களாக மாறிவிடுவர் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

ஊழியத்திற்கென்று புறப்படும் நம்மிடத்தில் இருக்கும் குணம் என்ன? அழிக்கும் குணமா அல்லது ஆக்கும் குணமா? பரிசுத்த ஆவியின் பெலன் இல்லாமலிருந்தால் நாமும் சீஷர்களைப் போன்றுதான் காணப்படுவோம். முற்கோபிகளாகவும், சண்டையிடுகிறவர்களாகவும் காணப்படுவோம். நம்மை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களை வேற்றுமை உணர்வுடனும், வெறுப்புடனுமே பார்ப்போம். பரிசுத்த ஆவியின் பலன் இல்லாமல் ஊழியம் செய்யும் ஊழியர்களை அவர்களது கிரியைகளிலேயே அடையாளம் கண்டுகொள்ளலாமே. தங்களுக்கு விரோதமாய் எழும்புவோரை மன்னிக்கும் மனதில்லாமல், தங்களை அவர்களுக்கு விரோதியாக மாற்றிக்கொள்ளும் ஊழியர்கள் பரிசுத்த ஆவியின் பெலன் இல்லாதவர்களே. இத்தகையோரால், தேவ நாமம் தூஷிக்கப்படும். தன்னை சிலுவையில் அறைந்தாலும் சிந்தையோ அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று இருப்பவரே கிறிஸ்துவின் குணம் கொண்டோர்.

பவுல் பேதுருவை எதிர்த்ததின் காரணமும் இதுவே. பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்கு முன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து விலகிப் பிரிந்தான், பேதுருவுடனே கூட இருந்த மற்ற யூதரும் மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை பவுல் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக பவுல் பேதுருவை நோக்கி, 'நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படி கட்டாயம்பண்ணலாம்' (கலா. 2:11-14) என்று சொன்னார்.

மேலும், இத்தாலியா பட்டாளத்தின் நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியுவினிடத்தில் பேதுருவை அனுப்பச் சித்தமாயிருந்தார் தேவன். பேதுரு பசியாயிருந்த நேரத்தில், அவனுக்கான போஜனமோ புறஜாதியாரிடத்தில் ஆயத்தமாக இருந்தது. கொர்நேலியுவின் வீட்டிற்கு பேதுருவை அனுப்பவும், இத்தகைய சிறைச்சாலையின் கதவை பேதுருவின் வாழ்க்கையில் தேவன் உடைக்கவேண்டியதாயிருந்தது. பசியோடிருந்தான் பேதுரு ஆனால், புறஜாதியினிடத்தில் செல்லவேண்டும் என்றபோது சிந்திக்கத் தொடங்கிவிட்டான். 'பேதுருவே எழுந்திரு, அடித்துப் புசி' (அப். 10:13) என்று அவனை எழுப்பிவிடவேண்டியதாயிற்று. 'தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே' (அப். 10:16) என்று மூன்று முறை பேதுருவினிடத்தில் பேசவேண்டியதாயிற்று. ஆத்துமாக்கள் வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் அநேகர் ஆனால், புறஜாதியாரிடத்திற்குப் புறப்பட்டுச் செல்லவோ அவர்களுக்கு மனதில்லை. தங்களுடைய இனம், தங்களுடைய உறவு என்றே உட்கார்ந்துகொண்டிருக்கின்றனர்.

சமாரியர்கள் இத்தனையாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியின் பெலனைக் கொண்டிருந்த இயேசு சமாரியர்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றுவிடவில்லை. சமாரியா நாட்டின் வழியாக அவர் பிரயாணப்பட்டுச் சென்றார். சீஷர்கள் தனியாக சமாரியாவின் வழியாகச் செல்ல அனுமதிக்காத இயேசு, தன்னுடன் அவர்களை சமாரியாவின் வழியாகக் கூட்டிச் சென்றார் (யோவான் 4:7). யூதேயாவை விட்டு கலிலேயாவுக்கு இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது, சமாரியா நாட்டின் வழியாகவே அவர் பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தார். பயணத்தின்போது, சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊரில் கிணற்றருகே களைப்படைந்தவராக இயேசு அமர்ந்திருந்தபோது, தண்ணீர் மொள்ள வந்த சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீயைக் கண்டு, 'தாகத்துக்குத் தா' என்று கேட்டார். ஊர் வழியாகச் செல்லுவோம், ஆனால் உறவு வேண்டாம் என்று இயேசு காணப்படவில்லை. ஜீவ தண்ணீர் ஊற்று இயேசுவினிடத்தில் காணப்பட்டபோதிலும், சமாரியர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்ற தாகம் அவரிடத்தில் காணப்பட்டது. தண்ணீர் தர தயங்கி நின்ற ஸ்திரீயினிடம், தானே கிறிஸ்துவாகிய மேசியா என்று அறிமுகம் செய்தார்; அவளுடைய வாழ்க்கையின் காரியங்களைச் சொல்லி அவளை தேவனண்டை திருப்பினார். நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவா 4:39). தாகத்துக்கே தண்ணீர் கொடுக்க தயங்கியவர்கள், இப்போதோ இயேசுவைத் தங்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; இயேசுவும் இரண்டு நாட்கள் சமாரியாவிலே தங்கினார் (யோவான் 4:40). இரண்டு நாட்கள் இயேசு சமாரியாவில் இருந்தபோது, அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே, கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள் (யோவா 4:42). இந்த ஆத்தும அறுவடைக்குப் பின்னரே அவர் கலிலேயாவுக்குப் போனார். நாம் பயணப்படும் இடங்களிலும், சுவிசேஷம் அறிவித்தலும், ஆத்துமாக்களின் அறுவடைகளும் இயேசுவைப் போன்று படிப்படியாக வளர்கின்றதா? உலகத்தாரால் தள்ளப்பட்ட ஜனங்கள் ஏராளம் ஏராளம், சமுதாயத்தினால் மதிக்கப்படாத ஜனங்கள் எத்தனையோ பேர் உண்டே. ஜாதியின் பெயலாலும், பொருளாதாரத்தைக் கணக்கில் கொண்டும் உலகத்தாரின் கண்களில் படமலிருக்கின்ற ஜனங்கள் மத்தியில் செய்யும் பயணம் அவர்களது ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய காரணமாகிவிடும்.


ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட சமாரியர்கள், இயேசுவை விசுவாசித்ததினால் உயர்த்தப்பட்டார்கள். மேலும், உவமையாக எடுத்துச் சொல்லும் அளவிற்கும், இயேசுவுக்கு ஒப்புமையாகப் பேசப்படும் அளவிற்கும் சமாரியன் உயர்ந்துவிட்டானே. எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்ற பிரயாணத்தின்போது யூதன் ஒருவன் கள்ளர் கைகளில் அகப்பட்டு, வஸ்திரங்கள் உரியப்பட்டு, காயப்பட்டு, குற்றுயிராகக் கிடந்தான். அவன் யூதனாயிருந்தபோதிலும், யூதனான ஆசாரியனும், யூதனான லேவியனும் காயம்பட்ட யூதனைக் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றார்கள். அந்த வழியாக அவர்களது பிரயாணம் அமைந்திருந்தும், அந்த மனிதனுக்கு உதவி செய்ய அவர்களுக்கோ மனம் வரவில்லை. ஆனால், சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான் (லூக் 10:33,34). தன் இனத்தை வெறுக்கும் யூதனாக காயப்பட்டவன் இருந்தபோதிலும் அவனுக்கு உதவி செய்தான் அந்தச் சமாரியன். அவன் யூதனா, சமாரியனா என்ற பிரிவினைவாதத்திற்கு முதலிடம் கொடுக்காமல், காயப்பட்டுக் கிடந்த அந்த மனிதனைக் கட்டுவதற்கே முதலிடம் கொடுத்தான்; தனக்குப் பிறனாயிருந்தபோதிலும், அந்த யூதனை பராமரித்தானே. ஆனால் யூதர்களோ, இயேசுவை சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் அவமதித்தார்கள் (யோவான் 8:48). என்றபோதிலும், இயேசுவோ, 'தான் பிசாசு பிடித்தவனல்ல' என்று மட்டுமே அவர்களுக்கு மறுப்பு தெரிவித்தார்; 'தான் சமாரியன் அல்ல' என்று யூதர்களிடம் மறுப்பு தெரிவிக்கவில்லையே; ஆம், தன்னை விசுவாசிக்கும் சமாரியர்களுக்கு இயேசு சகோதரனாகியிருந்தார்.

இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். (லூக் 17:12-16)

கானானிய ஸ்திரீ அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று கூப்பிட்டாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இவளை அனுப்பிவிடும் என்று சீஷர்கள் இயேசுவினிடத்தில் கேட்டுக்கொண்டபோது, இயேசுவோ, 'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல' என்றார். மேலும், 'பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல' என்றும் பதிலுரைத்தார். அவள் மேலும் அவரைத் தொடர்ந்து வந்தபோது, அவளது விசுவாசத்தைக் கண்டு, 'நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது' (மத். 15:22-28) என்றார். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12); இந்த வார்த்தை கானானிய ஸ்திரீயின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அதனாலேயே அவள் பிள்ளையானால் பிள்ளைகளின் அப்பத்தையும் பெற்றுக்கொண்டாள். புறம்பான யூதனானவன் யூதனல்ல, உள்ளத்திலே யூதனானவனே யூதன் (ரோமர் 2:28,29) என்பதனை செயலில் காட்டினார் இயேசு. அதுமாத்திரமல்ல, அவருடைய சீஷர்களிலும் கானானியனான சீமோன் இடம் பெற்றுவிட்டானே (மாற். 3:18). இயேசுவைத் தொடர்ந்து அப்போஸ்தலர்களும் சமாரியாவிலே தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினார்கள். பிலிப்பு சமாரியாவில் பிரசங்கித்தான் (அப். 8:5); பரிசுத்த ஆவியின் பெலத்தைப் பெற்ற அப்போஸ்தலர்கள், சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் (அப். 8:25). சமாரியாவில் சபைகள் எழும்பின (அப். 9:31), சமாரியர் மனந்திரும்பின செய்தி சந்தோஷத்தை உண்டாக்கியது (அப். 15:3).

விசுவாசியான பின்னரும், விசுவாசிகளை வேறு ஜாதியினராகப் பார்க்கும் மக்கள் உண்டே. விசுவாசிகள் என்று சொன்னபோதிலும், தங்கள் தங்கள் ஜாதியின் பெயரை இன்னும் வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சத்தியம் பலமுறை போதிக்கப்பட்டிருந்தும் வேற்றுமையை காட்டிக்கொண்டிருக்கும் மக்களாக நாம் காணப்படாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.