அவரும், அவனும்

 

தேவன் நம்முடைய பிதா, நாம் அவருடைய பிள்ளைகள், நாம் அவருடைய பாதுகாப்பின் வளையத்திற்குள் இருப்பவர்கள், அவரால் பாதுகாக்கப்படுகின்றவர்கள். எனினும் சத்துருவோ எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையை அழிக்கும்படிக்கே நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் ஆக்க அறியாதவன், அழிப்பதையே அறிந்தவன். தேவனுடைய வேலிக்குள் இருப்பவர்களை வேலிக்கு வெளியே கொண்டுவர சத்துரு எடுக்கும் முயற்சிகள் அநேகம்; இவைகளில் நாம் விழுந்துவிடக்கூடாது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் வேலியை விட்டு எவ்விதத்திலும், எக்காரியத்திலும் வெளியேறிவிடக்கூடாது. நாம் அவருடைய திராட்சத்தோட்டமானவர்கள். அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருக்கிறார் (ஏசா. 5:2) என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறான். இதனையே இயேசுவும் உவமையின் மூலமாக உறுதிப்படுத்துகின்றார், 'வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதை குத்தகையாக விட்டு புறதேசத்துக்குப் போயிருந்தான்' (மத். 21:13) என்று போதித்தார். என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன். 4:12).

நமது வேலியைப் பிரித்து நம்மைக் கேலியாக்க விரும்புகிறவன் சாத்தான். சாத்தான் யோபுவைச் சுற்றிலும் தேவன் வேலியடைத்திருந்தார். வேலிக்கு வெளியே உலாவிக்கொண்டிருந்த சாத்தான், உள்ளே நுழைய வழி கிடைக்காததால், அடைத்தவரிடமே சென்று அனுமதி கோருகின்றான். சாத்தான் கர்த்தரை நோக்கி: யோபு விருதாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் (யோபு 1:10) என்று சொன்னான். அத்துடன், உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் (யோபு 1:11) என்று சொன்னான். வேலிக்குள் இருப்பவர்கள் அடைத்தவராலேயே அழிக்கப்படவேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு. வேலியை வைத்து பயிரை மேய விரும்புகிறவன் சாத்தான். தேவனே உமது கரத்தை நீட்டி யோபுவை அழியும் என்பதுதான் சாத்தான் கர்த்தருக்குக் கொடுத்த ஆலோசனை.you take away everything (GNB), put forth your hand now (MKJV & ASV) என்றே ஆங்கில வேதாகமங்கள் இவ்வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளன. ஆனால், கர்த்தரோ, அவனது அழிக்கும் ஆலோசனையை அழிப்பவனிடமே (யோவான் 10:10) விட்டுவிட்டார். நீதிமானுக்கு விரோதமாக கர்த்தர் கரம் நீட்டுவதில்லை, அவனது வேலியை அவர் பிரிப்பதுமில்லை. எனவே, கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார் (யோபு 1:12). உம் கையை நீட்டும் என்று சொன்னவனிடம், உன் கையை நீட்டு என்றார் தேவன். அப்படியே, உண்டானவைகளெல்லாவற்றையும் சாத்தான் தொட்டபோதிலும் உயிரைத் தொடவோ அவனால் கூடாதுபோயிற்று; யோபுவின் உயிரின் வேலியில் தேவன் உடனிருந்தார்; வெற்றி யோபுவுக்கே. நம்முடைய ஜீவனைத் தொட, நமக்காக ஜீவனைக் கொடுக்காத சாத்தானுக்கு அதிகாரமில்லை. பாலாக் பிலேயாமை அழைத்து இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி ஏவியபோது, தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் (எண். 22:12). தேவனுடைய தீர்க்கதரிசியை தேவனுடைய ஜனத்துக்கு விரோதமாக ஏவிவிட்டபோதிலும், தேவன் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால், இஸ்ரவேல் ஜனங்கள் வேலியை உடைத்து, அந்நிய பெண்களோடு சேர்ந்தபோது அழிவு அவர்களுக்கும் உண்டானது.

கசப்பான பழங்களைத் தருகிற திராட்சத்தோட்டத்திற்கு விரோதமாக கர்த்தர் செய்யும் காரியத்தையும் நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்து, கசப்பான கனிகளை நாம் கொடுப்போமென்றால், அவர் அதன் வேலியை எடுத்துப்போடுகிறார், அதன் அடைப்பைத் தகர்க்கிறார், அது மேய்ந்துபோடப்படவும், மிதியுண்டுபோகப்படவும் அனுமதிக்கிறார், அதை பாழாக்கிவிடுகின்றார். இவர்களுக்கு விரோதமாக கர்த்தருடைய கோபம் மூளுகின்றது (ஏசாயா 5:25). நாம் அவரோடு கொள்ளும் உறவிலேயே நம்மைச் சுற்றிய வேலி உறுதியாகின்றது.நாம் நீதிமானாயிருப்போமென்றால், அவருடைய கை நமக்கு விரோதமாக நீளாது. லோத்து நீதிமானாயிருந்தபடியினால் (2பேதுரு 2:8), ஜீவன் தப்ப ஓடிப்போகும் சிலாக்கியம் அவனுக்குக் கிடைத்தது (ஆதி. 19:17).

இன்றோ கிறிஸ்தவனுக்கு விரோதமாய் கிறிஸ்தவனையே ஏவிவிடும் சத்துருவின் தந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம். சபைக்கு சபை அடித்துக்கொள்ளும் மனிதர்களும், சபைக்காக வைராக்கியம் பாராட்டும் மக்களும் ஏராளம். கிறிஸ்தவர்களாயிருந்தும் விரோதிகளாகவே வாழும் குடும்பத்தினரும், மக்களும் ஏராளம். இவை அனைத்தும் சத்துருவின் தந்திரங்களே. நம்முடைய ராஜ்யத்தைப் பாழ்ப்படுத்தும்படிக்கே நமக்கு விரோதமாய் நம்மை எழுப்புகிறான் சத்துரு. நாம் நீதிமானாயிருந்தால், நீதியே நம்மைக் காக்கும்.