அழிக்கும் ஆலோசனைகள்

 

சுற்றியிருக்கும் மனிதர்கள் தரும் ஆலோசனைகளுக்கு நம்மை விற்றுப்போட்டு, வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். தங்களுடைய சத்தத்தை உயர்த்தி உயர்த்திப் பேசி தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக நம்மை திசை திருப்ப முயலும் மனிதர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். நண்பர்களாயிருக்கலாம், குடும்பத்தினராயிருக்கலாம், சக ஊழியர்களாயிருக்கலாம் எவராக இருந்தாலும் அவர்களிடமிருந்து ஆலோசனைகள் பிறக்கும்போது அதனை ஆராய்ந்துபார்க்கவேண்டியது நம்முடைய கடமையே. 'அவர் சொன்னதினால் செய்தேன்' என்று ஆதாமைப்போல சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது.

இயேசு இவ்வுலகத்தில் பிறந்தபோது, ஏரோது குழந்தைப்பருவத்திலேயே அவரைக் கொன்றுவிட வகைதேடினான்; எனினும் தேவன் பாதுகாத்தார். ஏரோதுவின் மரணத்திற்குப் பின்னர், இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்ப எண்ணியபோதும், ஏரோதுவின் மகன் அர்கெலாயு யூதேயாவில் ஆளுகிறான் என்பதை அறிந்த யோசேப்பு, இயேசுவைக் கூட்டிக்கொண்டு கலிலேயாவுக்குச் சென்றான் (மத். 2:21,22). இயேசு வளர்ந்தபோது, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடிக்கொண்டிருந்தார்கள்; இதை அறிந்த இயேசு, யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார் (யோவான் 7:1). அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்று இயேசுவுக்கு ஆலோசனை கொடுத்தனர். அவர்கள் இயேசுவை விசுவாசியாதவர்கள் (யோவா 7:3-5).

இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களிடத்திலிருந்து வரும் ஆலோசனைகள், வேற்று வழிக்குள் நம்மைத் தடம் மாறிச் சென்றுவிடச் செய்யும். யாக்கோபு தன் குமாரரை அழைத்து கடைசி நாட்களில் நேரிடும் காரியங்களை அறிவித்தபோது, சிமியோனையும் லேவியையும் குறித்து 'என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே' (ஆதி. 49:6) என்று சொல்கிறார். தாவீதின் ஜெபமும் இதுவாகத்தான் இருந்தது. 'கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக' (2சாமு. 15:31) என்று ஜெபித்தான் தாவீது. யாக்கோபு அறிந்துகொண்டதைப் போன்று, தாவீது தெரிந்துகொண்டதைப் போன்று, தேவனுக்கு விரோதமானவர்களையும், விரோதமாகச் சொல்லப்படும் ஆலோசனைகளையும் அறிந்துகொள்ள முற்படுவோம்.

யூதேயாவின் ராஜா மாத்திரமல்ல, இயேசுவோடு குடும்பத்தில் உடனிருந்த, ஒன்றாய்ப் பிறந்த சகோதரர்களும் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காதிருந்தார்கள். எல்லாரைப்போல் தங்களது தாயாகிய மரியாளுக்கே மகனாக இயேசு பிறந்திருக்க, அவர் எப்படி தங்களிலும் உயர்ந்தவராக மற்றறோரால் எண்ணப்படமுடியும். மூத்த சகோதரனாக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால், தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதே என்கிற மனோபாவமே இயேசுவின் சகோதரர்களிடத்தில் காணப்பட்டது.

யோசேப்பின் வாழ்க்கையில் நடந்ததும் இதுவே. இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள் (ஆதி. 37:3,4). தேவனுக்குப் பிரியமாயிருந்தவன் யோசேப்பு, தேவனிடத்திலிருந்து சொப்பனத்தையும் பெற்றவன் யோசேப்பு. சகோதரர்களுடைய துன்மார்க்கத்தை தகப்பனுக்குச் சொல்லிவந்தவன் (ஆதி. 37:2). தங்களிலும் அவன் உயர்ந்தவனாகக்கூடுமோ? என்று யோசேப்பின் சகோதரர்கள் நினைத்தபோது, அவனை வெறுக்கத்தொடங்கினார்கள். இன்றைய நாட்களிலும் இத்தகைய நிலையே. அற்புதம் செய்தாலும் உடன் சகோதரர்களை சத்துருக்காக பாவித்து, அநியாயம் செய்யும் அந்நியரை சிநேகிதர் என்று கரம்தட்டிக்கொள்கின்றனர். சகோதரர்களாக இருக்கும் ஒருவர் மற்றவரால் உயர்ந்தவராகக் கருதப்படும்போது, சகோதரனை ஒழித்துக்கட்டவே சகோதரர்கள் தீர்மானிக்கின்றனர்.

'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' என்று ஸ்திரீகள் பாடியபோது (1 சாமு. 18:7) அது சவுலுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. தேசத்திற்காக நல்லதோர் செயலைச் செய்யத தாவீதைக் கொல்லும்படி சவுலைத் தூண்டியது. பிதாவோடு தொடர்புடைய மனிதர்களை உலகம் பகைப்பது வழக்கமாகியிருந்தது. உடனிருந்தும், உடன் பிறந்தும், தேவனுடைய பிள்ளையாக நம்மை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களால் எந்நேரமும் நமக்கு ஆபத்து உண்டாகலாம்;.

இயேசுவை விசுவாசிக்காத இயேசுவின் சகோதரர் இயேசுவை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள் அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் (யோவா 7:3-5). அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாய் பலனளிப்பார் (மத். 6:6) என்பதை அறியாதவர்கள் அவர்கள். அவர்கள் கொடுத்த சகோதரத்துவமான ஆலோசனை அல்ல, சதி என்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை (யோவான் 7:6) என்று சொன்னார். ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவன் வீட்டாரே (மத். 10:36) என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார்; அதனை போதிக்கவும் செய்தார். எனவே, சகோதரர்கள் பண்டிகைக்குப் போன பின்னர், வெளியரங்கமாய்ப் போகாமல், அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார் (யோவான் 7:10). பண்டிகையிலே யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். யூதர்கள் இயேசுவை தேடும் இடத்திற்கு சகோதரர்கள் இயேசுவை அனுப்பிவைக்க நினைத்தனரே; இது காட்டிக்கொடுக்கும் செயலல்லவா? பிடித்துக்கொடுக்கும் செயலல்லவா? குரோதத்தினால் சிக்கவைக்கும் செயலல்லவா?

இத்தகைய சகோதரர்களின் வலையில் பலர் விழுந்துவிடுகின்றனர். உயர்த்தும்படியாகவும், உலகத்துக்கு வெளிப்படுத்தும்படியாகவும் சொல்லப்படும் பல்வேறு ஆலோசனைகளில் சிக்கிக்கொள்கின்றனர். தங்கள் உருவங்களை உலக மக்களுக்கு முன்னே உயர்ந்ததாக எடுத்துக்காட்ட நினைக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குப் புறப்படுகின்றனர் அல்லது போகக்கூடிய இடங்களுக்குப் புறப்படாதிருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலை இன்றைய நாட்களில் ஊழியர்கள் பலருக்கும் உண்டாகிறது. ஊழியத்தை தொடங்கும் அவர்கள், கர்த்தர் கொடுத்த தாலந்தைப் பெற்ற அவர்கள் உலகத்துக்குத் தங்களை வெளிப்படுத்தவேண்டும் என்ற நிலைக்குத் தங்களைத் தள்ளிவிடுகின்றனர். இதுவே பல்வேறு பட்டங்களை ஊழியர்கள் தங்கள் பெயர்களுக்கு முன் இட்டு அச்சடிப்பதின் அர்த்தம். தீர்க்கதரிசி என்றும், சுகமாக்கும் வரம் பெற்றவர் என்றும், அபிஷேக வரம் பெற்றவர் என்றும் இன்னும் பல்வேறு அடைமொழிகளை தங்களது பெயருக்கு முன் போட்டுக்கொண்டு, உலகம் தங்களை எப்படியாவது அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணத்திற்குள் தங்களைத் தள்ளிக்கொள்கின்றனர்.

மற்றொருபுறம், தங்களை உயர்த்த நினைத்தவர்களை உலகம் பகைத்தது. அவர்கள் சமமாயிருப்பதை சகித்துக்கொள்ள மனதற்றவர்கள். மற்றவர்களைக் காட்டிலும் தங்களை மேன்மையாகவே மேட்டிமையுடன் எண்ணிக்கொண்டேயிருப்பவர்கள். இத்தகையோரின் மனதில் பெருமையின் விதை விழுந்து மரமாக வளரவும் தொடங்கியிருக்கும். அப்படிப்பட்ட மரம் கோடரியினால் வெட்டப்படும். பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறாரே. எனவே, சகோதரர்களாயிருந்த சீஷர்களுக்குள், 'எவன் பெரியவனாயிருப்பான்?' என்ற கேள்விக்கு இயேசு இடங்கொடுக்கவில்லை. 'இவன்தான் பெரியவன்' என்று ஒருவனை பெரியவனாக்கவுமில்லை. அது வேதனையையே கொடுக்கும் என்பதை அறிந்த இயேசு, தனது போதனையினால் அதனை அழித்துவிட முயற்சித்தார் (மத். 18:1, லூக். 9:46, லூக். 22:24). செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்று கேட்டபோது, இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார் (மத் 20:20-23). நடந்தது என்ன? உடனிருந்த மற்றப் பத்து பேரும் அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள் (மத். 20:24). 'நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்' (மத். 23:10) என்றார். எரிச்சலைக் கொண்டுவரும் உயர்வு தாழ்வு பதவிகளை சகோதரர்களுக்குள் அனுமதிக்கவிரும்பாதவர் இயேசு. ஆனால், இதையே இன்றைய சமுதாயம் தேடியலைகிறது. சகோதரர்களிடத்திலிருந்து தங்களை உயர்ந்தவர்களாக வேறுபடுத்திக்காட்டவேண்டுமென்று மனிதர்கள் செய்யும் பிரயத்தனங்கள்தான் எனத்தனை எத்தனை? வேறுபடுத்த நினைத்து வேரோடு அழிந்துபோகாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக.