வழியா, வலியா

 

இயேசுவை அறிந்துகொள்வது மாத்திரமல்ல, அவரை அறிவிக்கவேண்டியதும் நமது பொறுப்பு; அது நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறதே! சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ! (1கொரி. 9:16) என்று தனது அர்ப்பணிப்பை கொரிந்து சபையின் மக்களுக்கும் அறிவித்தார் பவுல். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அழைக்கப்பட்ட நாம், பயணத்தின் பாதையையும் அறிந்திருக்வேண்டும்; பாதை மாறிவிடக்கூடாது. எதையோ செய்ய அழைக்கப்பட்ட நாம் எதைஎதையோ செய்துகொண்டிக்கக்கூடாது, அப்படிச் செய்வோமென்றால், அர்ப்பணத்தின் வழியை கோட்டைவிட்டுவிடுவோம். தேவன் நமக்கென நியமித்த இலக்கை அடையும்படி, நம்மை நெருக்கும் தேனுடைய அன்பை நாம் ஒவ்வொரு நாளும் புரிந்துகொள்ளவேண்டும். ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரை யும் இளைக்கப்பண்ணும் என்பதுதான் உண்மை (பிர. 10:15). அது உடனிருப்பவரை மட்டுமல்ல, அவர்களையும் இளைத்துப்போகவே செய்யும். நம்முடைய நிலை இப்படி ஆகிவிடக்கூடாதே!

பரலோகத்திற்குப் பயணப்பட்டுப் போகிறோம் என்பது இயேசுவை ஏற்றுக்கொண்ட அனைவரும் அறிந்ததே; ஆனால், போகும்போது வழியில் எதைச் செய்துகொண்டுபோகவேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும். நம்முடைய பயணத்தின் முடிவிலே எதைச் சாதிப்போம்? எதைச் சந்திப்போம்? என்பதையே சிந்தித்துச் செயல்படுவோம்; அதுவே நம்முடைய அழைப்பினை உறுதியாக்கும். அழைப்பிற்கடுத்த செயல்களும், நோக்கமுமே நமது பயணத்தின் போக்கை நிர்ணயிக்கவேண்டும். வழி தப்பிப்போன மக்களைப் போல அழைக்கப்பட்டோர் அலையக்கூடாது. வழிதப்பிப்போன ஜனத்தைக் குறித்து ஓசியா தீர்க்கதரிசி: அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்hற்ற அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள் (ஓசியா 8:7) என்று எழுதுகிறார்; ஆம், வழிதப்பியோரின் நிலை இதுவாகத்தான் இருக்கும். எனவே பவுல், 'நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்' (1கொரி. 9:26) என்கிறார். சிலம்பம்பண்ணினேன் என்பது முக்கியமல்ல, எதற்காக எதனுடன் சிலம்பம்பண்ணினேன் என்பதே முக்கியம். அழுதுகொண்டே போவதுதான் நமது பாதையென்றாலும், அதிலேதான் நாம் போகவேண்டும்; நமது கண்ணீரின் துளிகளினால் விதைகள் விளைச்சலைக் கொடுக்கும் காலம் வரும் (சங். 126:6). அழைக்கப்பட்டோரே, ஆவிக்குரிய பெலம் பெற்றோரே உங்கள் பெலம் வீணாகிவிடாதபடிக்கு, நியமிக்கப்பட்ட வழியிலேயே வலம் வாருங்கள்.

பெலமுள்ள ஓர் மனிதன் இருந்தான்; அவன் தனது பெலத்தைக் கொண்டு எதையாகிலும் செய்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டான். வீணாய் வீட்டில் இருப்பதற்கு மனமற்ற அவன் ஒரு வாளியையும் கயிற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான், வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணற்றிலிருந்த நீரை இறைத்து இறைத்து தரையில் ஊற்றிக்கொண்டேயிருந்தான். காலை தொடங்கி, மாலை வரை அவனது செயலை போவோரும் வருவோரும் பார்த்துக்கொண்டேயிருந்தனர். அவன் இறைத்து ஊற்றிய நீர் எவ்வித செடிக்கும், தோட்டத்திற்கும் பாயாமல் வீணாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், இன்று வேலை செய்துவிட்டோம் என்ற உற்சாகத்தில் வீடு திரும்புவான். தினமும் தனது பெலனை இப்படியே விரயமாக்கிக்கொண்டிருந்த அவன் மரணத்தை நெருங்கியபோது அவன் ஊற்றியிருந்த நீரினால் ஆங்காங்கே காஞ்சொறிகளும், காட்டுச் செடிகளும் மட்டுமே முளைத்தெழும்பியிருந்தன. கனிகளைத் தரும் விருட்சட்கள் ஒன்றுமில்லை. பெலனைச் செலவழித்தது உண்மைதான், ஆனால், செலவழிக்கவேண்டிய இடத்தில் அதனைச் செலவழிக்கவில்லை. வேலை நடந்தது, ஆனால் அழைப்போ வீணாகிவிட்டது.

எனக்குப் பிரியமானவர்களே, உங்களது பெலத்தை நீங்கள் எப்படி செலவு செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் ஒவ்வொரு துளியும் அழைப்பின் வழியிலேயே செலவழிக்கப்படட்டும். அழைப்பிலே களைப்பில்லை; தொல்லைகள் பல நேரிட்டாலும் தொடுவோம் நாம் எல்லையை. இதற்குத்தான் நான் அழைக்கப்பட்டேன் என்றால், அதற்காகவே ஓடுங்கள். வழியில் வரும் விரியன்களெல்லாம், உதறிவிட்டால் உயிரிழந்துவிடும்; பவுலை நினைத்துக்கொள்ளுங்கள்.

அழைப்பின் பாதையில் அணிவகுத்துச் செல்லவேண்டிய பலர், 'தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகின்றனர்' (யாக். 1:14). எதைச் செய்யவோ கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்கள், வேறெதையோ செய்துகொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களது கால்கள் அழைப்பின் பாதையில் இல்லாததே. குறிப்பிட்ட பணியினைச் செய்ய அழைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் குறியைத் தப்பவிட்டுவிடுகின்றனர். பிற ஊழியர்களும், ஊழியங்கள் செய்யும் விதங்களையும் பார்க்கும்போதோ அவவைகளால் கவரப்பட்டு தாங்களும் அப்பயே செய்யவேண்டும் என்று எண்ணங்கொண்டு, தனித்துவமான தங்கள் வழியினை தவறவிட்டுவிடுகின்றனர்.

சத்திரக்காரர்களாகிவிட்ட நல்லசமாரியன்கள்: நல்லசமாரியனாக புறப்பட்டு சென்றுகொண்டே...யிருக்கவேண்டிய பலர் இன்று சத்திரக்காரர்களாக மாறிவிட்டனர். சமூக சேவை என்ற பெயரில், சுவிசேஷத்தின் பாதையை பலர் தவறவிட்டுவிட்டனர். சமூக சேவை என்பதையும் சத்தியம் அறிவிப்பதையும் பிரித்துப்பார்ப்பதிலேயே தடுமாறிப்போவோமென்றால், சத்தியத்தைச் சுமந்துகொண்டு நெடுந்தூரம் செல்லவேண்டிய பயணம் தடைபட்டுப்போய்விடும். நல்ல சமாரியனுடைய வேலையைச் செய்ய அழைக்கப்பட்ட பலர், சத்திரக்காரர்களின் வேலையைச் செய்துகொண்டிருக்கின்றனர். தாங்கள் இருக்கும் சத்திரத்தையே விரிவாக்கி, விரிவாக்கி கட்டிக்கொண்டிருக்கின்றனர். காயம்பட்ட மனிதர்களை வெளியிலே தேடும் சமாரியர்களின் எண்ணிக்கையோ குறைந்துகொண்டேபோகின்றது. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் எனக் கட்டிவைத்தாலும், 'வெளியே சாலை ஓரத்திலே காயம்பட்டுக் கிடப்பவர்களைக் கொண்டுவரவும் ஆட்கள் வேண்டுமே' அதனை அசட்டை செய்துவிடலாகாதே.

பிரிட்டனில் தொழிற்புரட்சி உண்டான காலத்தில், சிறுவர்கள் பலர் தொழிற்சாலைகளிலேயே பணிபுரிந்துகொண்டிருந்தனர். பள்ளிக்குச் சென்று கல்வி கற்கவும் நேரமின்றி தொழிற்சாலைகளிலேயே முடங்கிக்கிடந்தனர் சிறுவர்கள். இத்தகைய சிறுவர்களுக்கு கல்வியைப் புகட்டவேண்டும் என விரும்பிய கிறிஸ்தவ ஊழியர்கள் 1780-ம் ஆண்டு ஞாயிறு பள்ளி இயக்கத்தினைத் தொடங்கினர். ஞாயிற்றுக் கிழமை மாத்திரமே சிறுவர்களுக்கு கல்வியைப் புகட்டிவந்தனர் கிறிஸ்தவ ஊழியர்கள்; அது மக்களிடையே நல்ல நாட்கள் செல்லச் செல்ல இந்த ஞாயிறு கல்வி இயக்கம் அமெரிக்காவுக்கும் பரவியது. ஒழுங்காக, வழக்கமாக ஆலயத்திற்குச் செல்லாத பெற்றோரும் ஞாயிறு கல்விக்குச் செல்லும்படி தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர். விளையாட்டுகள், பரிசுகள், சுற்றுலாக்கள் என பல்வேறு அம்சங்களோடு மேலும் மெருகூட்டப்பட்டன ஞாயிறு கல்விகள். 'வேதாகமம்' மாத்திரமே ஞாயிறு பள்ளியின் பாடப்புத்தகமாகக் கொடுக்கப்பட்டது. வேதத்தின் வசனங்களை மனனம் செய்து, கற்று, எழுதுவதன் மூலமே கல்வி அறிவைக் கொடுத்துவந்தனர் கிறிஸ்தவ ஊழியர்கள். சிறுவர்களுக்கான பாடல்களுடன் ஜெபிக்கவும் கற்றுக்கொடுத்தனர்; ஞாயிறு கல்வி ஊழியத்திற்கென பல ஊழியர்களும் தங்களை அர்ப்பணித்தனர். 1870-ம் ஆண்டு, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் கல்வி கட்டாயமாக்கப்பட்டபோது, பள்ளிக்கூடங்கள் பெருகின, சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கத் தொடங்கினர். எனினும், ஞாயிறு பள்ளிக்கும் சிறுவர்கள் வருகை தந்து இயேசுவின் அன்பை அறிந்துவந்தனர். எனினும் பிரதானமான கல்வி அவர்களுக்கு பள்ளியிலேயே கிடைத்தது. அரசாங்கம் பள்ளிகளை நடத்த, கிறிஸ்தவ ஊழியர்களோ ஞாயிறுபள்ளிகளை மட்டுமே நடத்திவந்தனர். ஆனால், இன்றைய நிலையோ மாறிப்போய்விட்டது. வேதத்தை விட்டு விலகி தொழி;ற்கல்வியைக் கற்றுக்கொடுக்கவில்லை. அந்நாட்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்குக் கல்வி தேவைப்பட்டது, இன்றோ, வேலை தேடுவதற்கு கல்வி தேவைப்படுமளவிற்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது; எனவே, ஊழியர்களும், ஊழியங்களும் தங்கள் பாதைகளையும் சற்று மாற்றி அமைத்துக்கொண்டன.

அறிவும், ஞானமும் : சாலமோன் ஞானத்தைக் கேட்டபோது, தேவன் அவனுக்கு புத்தகங்களைக் கொடுக்கவில்லை, புற்களைப் பற்றியும், மரங்களைப் பற்றியும் எழுதப்பட்டதும் (தாவரவியல், உயிரியல்), நியாயம் விசாரிப்பதற்குச் சட்டப் புத்தகங்களைக் கொடுக்கவில்லை மாறாக, மொத்தமாக அவனை நிரப்பிவிட்டார். தேவனோடு பேசிக்கொண்டிருந்த நிமிடங்களிலேயே அவன் நிபுணணாகிவிட்டான். அதுவுமல்லமல், ஐசுவரியமும் அவனுக்கு கூடக் கொடுக்கப்பட்டது. நோவாவும் அப்படியே, பேழை உண்டாக்கு என்றார், அவன் அவர் சொற்படியே செய்தான் (ஆதி. 6:22). அப்படியே, ஆசாரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி மோசேக்குப் போதித்த தேவன், பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும் வேலை செய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும் மற்றும் சகலவித வேலைகளையும் யுகித்துச் செய்கிறதற்குதம் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினார். இத்தனை வேலைகளையும் அவன் கலாசாலைக்குச் சென்று கற்றுவிட்டுவரவேண்டும் என்றால், ஆசரிப்புக்கூடாரம் என்று கட்டப்பட்டிருக்குமோ எனக்குத் தெரியாது. இயேசுவைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் வார்த்தையே நமது கவனத்தின் மையத்தை ஈர்க்கட்டும். யூதர்கள் இயேசுவைக் குறித்து, 'இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?' என்று ஆச்சரியப்பட்டார்கள்.

மொத்தமாகத் தரும் தேவனை, புத்தகத்தை வைத்து மட்டுப்படுத்திவிடமுடியாது. கற்றோர்களை விட கல்லாதோர்கள் அறிவு சிறுத்தவர்களல்ல. கல்வி என்ற சட்டத்திற்குள் உலகம் இவ்விரு கூட்டத்தினரையும் உருவாக்கி, அறிவைக் கொண்டு அவர்களைப் பிரித்துவிட்டது அவ்வளவுதான். இணக்கமான ஓர் வசனத்தை இச்சத்தியத்தின்போது ஞாபகமூட்ட விரும்புகின்றேன். அந்திக்கிறிஸ்துவின் நாட்களில், அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்ததைப் போல (வெளி 13:17), படித்து பட்டம் பெற்றவர்கள் மாத்திரமே வேலைக்கும், அரசுப் பணிகளுக்கும் தெரிவு செய்யப்படுகின்றனர். பட்டம் இருந்தால் பதவி என்ற நிலை. இந்நிலை உலகத்தின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டதல்ல, மனிதர்களால் இடையில் வகுக்கப்பட்டதே. கல்வி இல்லையேல் எதிர்காலம் இல்லை, வேலை இல்லை, வாழ்வு இல்லை என்ற நிலைக்கு மனிதர்களை கல்வியால் சிறைவைக்கப்பட்டுவிட்டனர்.

இப்போது, பூமியில் இருக்கும் மனுக்குலம், நிலவைச் சென்றடையும் ஞானம் வேண்டும் என்றோ, அல்லது செவ்வாய் கிரகத்தைச் சென்றடையச் செய்யும் கல்வி வேண்டும் என்றோ, விண்ணிலே கூடு கட்ட ஞானம் வேண்டும் என்றோ கர்த்தர் விரும்பியதில்லை. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்ற ஞானம் போதிக்கப்பட்டு, பரலோகத்திற்குச் சென்றடையச் செய்யும் போதனையையே தேவன் விரும்புகின்றார். கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் பயின்ற ஓர் மாணவன் நிலவைச் சென்றடைந்து, பரலோகத்தை கோட்டை விட்டுவிட்டால் அவனது நிலை என்ன? பாபேல் கோபுரத்தை (விஞ்ஞானம்) மாத்திரம் கட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, பாவியாகவே அவனை விட்டுவிடக்கூடாது. ஆங்காங்கே சென்று திரிந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டிய ஊழியர்கள் பலர் ஞானத்தை விட்டு விட்டு, அறிவைப் புகட்டும் சத்திரத்தில் சிக்கிக்கொண்டார்கள். அரசாங்கத்தின் பிடியில் அகப்பட்டுக்கொண்டார்கள். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதானபடியினால், அரசாங்கத்தின் கட்டளைகளைக் கைக்கொள்ள தள்ளப்படுகின்றார்கள். சுதந்திரப் பறவைகளான சுவிசேஷகர்கள் கூண்டுக்குள் சிக்கிக்கொண்டார்கள்.

மிஷனரி ஒருவரைச் சந்தித்தேன். தனது ஊழியத்தைப் பற்றி என்னுடன் அவர் உரையாடிக்கொண்டிருந்தபோது, தன்னுடைய ஒரே ஒரு மகனைக் குறித்ததான தேவ திட்டத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினார். நான் அவனை கல்வி கற்க அனுப்பப்போவதில்லை, பள்ளிக்கும் அனுப்பப்போவதில்லை, வேதத்தை மாத்திரமே அவன் கற்றால் போதும் என்றார். அவரது முடிவு எனக்கு அதிர்ச்சியாயிருந்தது; ஏனெனில், அப்போது நான் அந்த முதிர்ச்சியில் இல்லை. பள்ளிக்குச் சென்று பதினேழு வருடங்கள் படிப்பினை முடித்து, பின்னர் உயர் கல்வியும் கற்றால் பின்பு அவன் ஊழியம் செய்யவருவானோ இல்லையோ யாருக்குத் தெரியும்? என்றார். கல்வியில் சென்று செலவழித்த அந்த வருடங்கள் அவனது வாழ்க்கையில் வீணாகத்தான் இருக்கும், எனவே, தொடக்கமுதல் வேதத்தையே அவனது கரங்களில் கொடுக்கப்போகிறேன் என்றார். அவரது வார்த்தைகளை ஜீரணிக்கவோ எனக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. எழுதவும், வாசிக்கவும், உலகளவில் சிலவற்றை அறிந்துகொள்ளவும் கல்வி என்பது கட்டாயமல்லவா? என்று அவரோடு வாதிட்டுக்கொண்டிருந்தேன். சாமுவேலை அவனது தாய் சிறுவயதிலேயே அன்னாள் கர்த்தருடைய சமூகத்தில் கொண்டு விட்டுவிட்டாளே, அந்தப் பிள்ளையோடு தேவனும் பேசத்தொடங்கிவிட்டாரே, அவனை தீர்க்கதரிசியாகவும் ராஜாவை அபிஷேகம் பண்ணுகிறவனாகவும் மாற்றினாரே, அவன் கல்வி கற்றது எங்கே? என்று கேட்டார். எனவே, என்னுடைய மகனையும் அப்படியே நான் செய்யப்போகிறேன், சில வருடங்கள் சில போதகர்களுடன் இருக்கும்படியாகவும், ஊழியத்தைக் கற்றுக்கொள்ளும்படியாகவும் அவனை அனுப்பவிருக்கிறேன் என்றார். எனது தந்தை என்னைப் படிக்கவைக்கவில்லையே, கல்விக்கு அனுப்பவில்லையே என்று அவன் பிற்காலத்தில் வருத்தப்படக்கூடாதே, என்று நான் சொன்னபோது. எனது அர்ப்பணிப்பு அவனைக் குறித்து அப்படித்தான்; பிற்காலத்தில் அவன் வருத்தப்படும் நிலைக்கு வந்தாலும் நான் அதனை விட்டுப் பின்வாங்கப்போவதில்லை என்றார். பள்ளியிலிருந்து முற்றிலுமாய் தனது பிள்ளையைப் பிரித்துவிட்ட அந்த ஊழியரைக் கண்டு நான் சற்று அசந்துபோனாலும், அவரது அர்ப்பணிப்பிற்கு வாதத்தின் இறுதியில் மதிப்பளித்தேன். உங்களது பிள்ளையை வேண்டுமென்றால் நீங்கள் படிக்கவையுங்கள், எனது மகனை நான் அப்படித்தான் செய்யப்போகிறேன் என்றார் என்னிடத்தில். அவரது மகன் கல்வியில் பேதையானாலும், கர்த்தரில் அவன் மேதையாயிருப்பான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. மோரியா மலையில் தகப்பனால் கட்டப்பட்ட ஈசாக்கின் வாழ்க்கை தேவனைத் தியானிப்பதாகவே மாறும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு அல்ல அறிவிப்பதே முக்கியம் என்பதை முக்கியமாகக் கொண்டிருந்த அந்த மிஷனரியின் பணி ஆசீர்வதிக்கப்படுவதாக.

நோக்கம் தவறிப்போவதை தேவன் விரும்புவதில்லையே; இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் (யோவா 2:14-16). ஆண்டவரே, இதில் வரும் லாபத்தைக் கொண்டு, ஆலயத்திற்கு இதைச் செய்கிறோம், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறோம், ஆலயத்தை விரிவாக்கிக் கட்டுகிறோம், ஆலயத்தில் பணிசெய்வோருக்கு ஊதியம் கொடுக்கிறோம் என்று சொல்வதற்குக்கூட அங்கே இடமில்லாமற்போயிற்று. பலிகள் வெளியே இருந்து கொண்டுவரப்படவேண்டும், ஆசாரியன் ஜனங்களால் போஷிக்கப்படவேண்டும் என்ற சட்டத்தை உடைக்கவே இயேசு சவுக்கை உண்டுபண்ணினார். வியாபாரிகள் ஊழியம் செய்யலாம், ஆனால், ஊழியர்கள் வியாபாரம் செய்யக்கூடாது. இந்தக் கோட்பாட்டில் கோட்டை விட்டுவிட்டவர்கள் அநேகர். தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2தீமோ. 2:4). பின்னுக்கு இழுக்கும் படகை விட்டால்தான், முன்னுக்குப் போகும் இயேசுவோடு முன்னேறமுடியும். இன்றோ, அரசு செய்திருக்கவேண்டிய பணியினை கிறிஸ்தவர்கள் செய்துவிட்டார்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் மக்கள் அநேகர்; எனினும், 'நீங்கள் அதைச் செய்ய அழைக்கப்பட்டவர்களா?' என்பதையும் ஆராய்ந்துபார்க்கவேண்டும்.

'என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்' என்று எலியா சொன்னபோது, கர்த்தர் எலியாவை நோக்கி, 'நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு' என்றார் (1இராஜா. 17:1-3) என்றார். உடமைகள் இல்லாத அவனால் உடனே புறப்பட்டுப்போக முடிந்தது. உடமைகளோடு இருக்கும் ஊழியர்களால் அப்படிச் செய்ய இயலாமற்போய்விடுகின்றது. கர்த்தருடைய சொற்கேட்டு பயணிப்பதற்கு மாறாக, ஆகாபை தேடிச் சென்று சகாயம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். சகாயம் வேண்டு சால்வையால் அவர்களை மூடி கௌரவிக்கிறார்கள். இருப்பிடத்தை விட்டு விட்டு ஓட முடியாத நிலையில் இருப்பதினாலேயே இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுகு;குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசாயா 30:21) என்கிறார் தேவன். வலது, இடது புறத்தை நாம் பார்க்கும்போது, வழியை விட்டு இழுபட்டுவிடக்கூடாது. எங்கெங்கோ, என்னென்னவோ நடந்துகொண்டிருந்தாலும், அதைக் குறித்து நீங்கள் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை; உங்கள் வழி இதுதான்; அதிலே திடமாயிருங்கள்; கர்த்தர் தந்த தாலந்துகளை திறமைகளை அந்த வழியிலேயே வெளிப்படுத்துங்கள். இழுப்புண்டுபோனால் உங்கள் அழைப்பு வெளுப்புண்டுபோகும்.

வலியும், வழியும்: அழைக்கப்பட்ட நாம் பாதையை விட்டு விலகி விலகிச் சென்றுகொண்டிருக்கும்போது, கொஞ்சம் வளர்ச்சியைக் கண்டதும், அதே பாதையில் மேலும் வளர முயற்சிக்கிறோம். என்றாலும், நம்மேல் அன்பு கொண்ட தேவன், அழைப்பை நோக்கியே நம்மைத் திருப்ப விரும்புகின்றார். அதற்காக அவர் செய்யும் பணி, நமது பாதைகளை அடைப்பதே. வழியை விட்டு நாம் விலகும்போது, பல விதங்களில் தேவன் நம்மை உணர்த்துவிக்கின்றார். எனினும், புரிந்துகொள்ளாமல் நாம் தொடர்ந்து செல்லும்போது, தேவன் பிறவழிகளை அடைக்கின்றார்; அது நமக்கு வலியாகத் தென்படும். நாமாக நமது வழியைக் கண்டுகொள்ளாமலிருக்கும் பட்சத்தில், தவறிச் சிதறித் தன்னார்வமாகப் பயணிக்கும் பட்சத்தில், நமது எண்ணத்தை ஒருமுகப்படுத்தவும், நோக்கத்தை ஒருமுகப்படுத்தவும், சீரான வழியில் நம்மை நடத்தவும், வழி இதுவே என்று சொல்லவும், நாம் பயணிக்கும் தவறான வழிகளை முட்களாலோ, சோதனைகளாலோ அடைத்துவிடுகின்றார் தேவன். என்றாலும், அத்தனை தூரம் அந்த வழியில் பயணித்து விட்ட ஊழியர்கள் தேவன் கொடுக்கும் தடையையும் உடைத்துவிடவே வகைதேடுகின்றனர். எனினும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவர் (ஏசா. 22:22) பல நேரங்களில் தன் பணியினைச் செய்து, பாதைகளைப் பூட்டி, பாதைகளை மாற்றுகின்றார். அது வலித்தாலும், நமது வழியோ அழைப்பை நோக்கி மாறியிருக்கும் என்பதே சந்தோஷமான செய்தி.

என்னுடைய வாழ்க்கையைத்தான் சிறந்த சாட்சியாக நான் இதற்கு முன்வைக்கமுடியும். 1992-ம் ஆண்டு நான் இரட்சிக்கப்பட்டேன், அன்று முதல் அந்த பெலமுள்ள மனிதனைப் போலவே ஆர்வம் கொண்டவனாக வாழத்தொடங்கினேன். 'பேசுவது, பிரசங்கிப்பது, எழுதுவது, ஆலோசனை வழங்குவது, ஒருங்கிணைப்பது' போன்றவைகளைச் செய்வதற்காகவே நான் தெரிந்துகொள்ளப்ட்டவன் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆங்காங்கே ஊழியர்களுடனும், ஊழியத்துடனும் என்னை இணைத்துக்கொண்டேன். என்றபோதிலும், கர்த்தர் எனக்கெனக் குறித்த வழியில் தீவிரமாகப் பயணிக்காமல் தாமதமாகவே ஊர்ந்து சென்றுகொண்டிருந்தேன்; ஆங்காங்கே இருந்த இழுழுப்புகளே அதற்குக் காரணங்கள். ஆனால், தேவனோ எனது வழிகள் அனைத்தையும் அடைத்து, எனது பயணத்தைத் துரிதப்படுத்தத் தொடங்கியிருந்தார். தடைகளைக் கொடுத்தே எனது அழைப்பின் பாதைக்குள் என்னை திசைதிருப்பிக்கெண்டிருந்தான் தேவன். 1998-ம் ஆண்டு சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய நேர்க்காணலில் தேர்வானேன்; எனினும், புறப்படும் நேரத்தில் உண்டான பலவிதமான சிக்கல்கள் அப்பயணத்தைத் தடுத்துப்போட்டன. தொடர்ந்து வட இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கும் உண்டான தடைகளினால், கர்த்தர் என்னை திசை திருப்பி மிஷனரியாக மாற்றினார். மிஷனரி ஸ்தாபனத்தில் பல்வேறு பணிகளில் எனது பணத்தை நான் தொடர்ந்துகொண்டிருந்தேன். மிஷனரி ஸ்தாபனத்திலும் தொழிற்பயிற்சி மையத்திலேயே எனது பணி தொடங்கியது; அதனைத் தொடர்ந்து மீடியா துறையில் கணக்காளனாக, உதவியாளனாகவும், ஸ்தாபனத்திற்காக வாகனங்களை வாங்குகிறவனாக, வாகனங்களுக்கான காப்பீடு மற்றும் சாலைவரிகளை மேற்பார்வையிடுகிறவனாக என பல்வேறு பணிகளை அணிந்திருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல கர்த்தர் ஒவ்வொன்றாக அவகளை விட்டு என்னை திசை திருப்பினார். இணையதளம் வடிவமைப்பதிலும் மூழ்கியிருந்த என்னை அவர் தூக்கியெடுத்தார். நான் மகிழ்ந்துகொண்டிருந்த பல செயல்களுக்காக மனம் வருந்தினேன். அழைப்பிற்கடுத்த எவைகளும் நுகத்தடியாக எனது கழுத்தில் இராதபடி, அழைப்பை மாத்திரமே நோக்கித் திரும்பச் செய்தார். அழைப்பைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் தேவன் அடைத்தபோது, பயணிக்கவேண்டிய வழியைப் பாராமல், அடைக்கப்பட்டவைகளை வலியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். தனிவாழ்வின் ஜெபநேரங்களும், வேத தியானங்களும் வழியை எனக்குத் தெளிவாய் காட்ட உற்சாகமானேன்.

சத்துரு அடைத்தால் தேவன் உங்களைத் தாண்டச் செய்வார்; ஆனால், தேவன் அடைத்தால், அழைப்பை நோக்கி உங்களைத் திசை திருப்புவார். அந்தப் பயணம் வலியல்ல, அதுதான் வழி.