Rev.Dr.G.U.போப்

pope


ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

SPG மிஷனெரியாக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞானசிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார்.
சிறிது நாட்களுக்குள்ளாகவே தனது மனைவியை இழந்தார்.இருப்பினும், சாயர்புரம் பகுதியில் சுவிசேஷப் பணியை தீவிரமாய் மேற்கொண்டார். பல கிராமங்களில் கிறிஸ்துவின் வாசனை வீசத் துவங்கியது. தூத்துக்குடி புதுக்கோட்டையில் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதனிமித்தம் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள்.அவர்கள் விசுவாசத்திலிருந்து விலகாதபடி அவர்களை நடத்தினார்.
சிவத்தையாபுரம் மக்களில் ஒருபகுதியினர் இந்து கோயிலில் வெளிப்பட்ட தேவ வல்லமையைக் கண்டு இயேசுவை ஏற்றுக் கொண்டு செபத்தையாபுரம் என ஊர்ப் பெயரை மாற்றினர்.சாயர்புரத்தில் செமினரி ஒன்றை ஆரம்பித்தார்.கண்டிப்புக்குச் சொந்தக்காரர். கையில் புளிய விளாறுகளுடன் தென்படுவார்.பிறகு இங்கிலாந்து சென்று மணமுடித்து விட்டு தஞ்சாவூரில் ஊழியம் செய்தார்.உதகமண்டலத்தில் பணியாற்றிய ஐயரவர்கள் பின் நாளில் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வரானார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இறப்புக்கு பின் தனது கல்லறையில்

இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.தேவன் நம் பகுதிக்கு அனுப்பின ஊழியர்க்காய் தேவனைத் துதிப்போம்.