காலை இழந்த கால் பந்து


தந்தை கால்பந்தாடும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து பார்த்து ரசித்து, தானும் அப்பாவைப் போல கால்பந்தாட்ட வீரனாகவேண்டும் வெறி இலட்சியம் அன்பரசனுக்குள் உருவானது. குழந்தையைப்போல பத்திரமாக தந்தை வீட்டில் வைத்திருக்கும் கால்பந்தை தொட்டுப் பார்ப்பதில்தான் அவனுக்கு எத்தனை அலாதிப் பிரியம். என்றாலும், தன் கால்களால் அதனை உதைத்து விளையாடுவதற்கு அப்பா விட்டுத்தர ஆயத்தமாயிராதது அவனுக்கோ அனுதின துக்கம். பயிற்சிக்காக அப்பா புறப்படும்போதெல்லாம், உடன் செல்லவேண்டும் என்பதில் உற்சாகமாக இருந்தான். பள்ளியிலிருந்து வந்ததும், வியர்வை நிற்பதற்கு முன் வீட்டுப் பாடங்களைப் படித்துக்கொண்டே, அப்பா புறப்படுவதைக் கவனிக்க ஓரக்கண்ணுக்கும் ஒருபுறம் வேலைகொடுத்துக்கொண்டிருந்தான். தந்தை புறப்பட்டதும், 'தாங்கப்பா, மைதானம் வரை பந்தை நான் கொண்டு வருகிறேன்' என்று பந்தை வலிய வாங்கிக்கொண்டு, வழியெல்லாம் புன்சிரிப்புடன் அவன் நடக்கும் நடையால், தந்தையை அல்ல, தன்னைத்தானே கால்பந்தாட்ட வீரன் என்று அழகுபார்த்துக்கொண்டவன் அவன்.

அது வெள்ளிக்கிழமை, அப்பா மைதானத்திற்குப் புறப்பட்டார், அன்பரசனும் பந்துடன் அப்பாவோடு தொற்றிக்கொண்டான். மைதானத்தைச் சென்றடைந்ததும், வீரர்கள் அப்பாவிடம் மகன் அன்பரசனை விசாரித்ததில் இவனுக்கு ஆனந்தம். 'அப்பா' என்ற சொல் மாத்திரமல்ல 'அங்கிள்' என்ற சொல்லையும் அவ்வப்போது உச்சரிக்க அறிந்துகொண்டான். இன்னும் சில நிமிடங்களில் போட்டி தொடங்கவிருந்தது. வீரர்கள் பயிற்சியினால் தங்களை மெருகூட்டிக்கொண்டிருந்தனர். அதோ, போட்டி ஆரம்பம். தான் கையில் சுமந்துகொண்டுவந்த கால்பந்து, வீரர்களின் கால்களுக்கிடையே சிக்கிப் புரளுவதையே பார்த்துக்கொண்டிருந்தான் அன்பரசன். விரர்கள் மைதானத்திற்குள் விளையாண்டுகொண்டிருந்தபோது, அன்பரசனோ அந்தப் பந்தை மைதானத்திற்கு வெளியே எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். மைதானத்தை விட்டு பந்து வெளியேறும்போதெல்லாம் ஓடிச் சென்று எடுத்து, மைதானத்துக்குள் பந்தைத் தூக்கிப் போடுவதில் அந்த ஒன்பது வயதில் அவன் அனுபவித்த ஆனந்தம் அந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவதற்கு ஈடாகவே இருந்தது அவனுக்கு. வீரர்களை விட்டுத் தன்னைப் பிரித்து வைத்திருக்கும் அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி என்றாகிலும் ஒரு நாள் உள்ளே சென்று விளையாடிவிடவேண்டும் என்ற கனவு உலகை காலால் கட்டிக்கொண்டிருந்தான். பள்ளிப் படிப்பு, ஒருபுறம் விட இயலாததாகத் தன்னைத் இறுக்கிக்கொண்டிருந்தபோதிலும், விரும்பிய விளையாட்டுக்கு ஒவ்வொரு நாளும் நேரம் கொடுக்க அவன் தவறியதில்லை. அவன் விளையாடத் தொடங்கிய மைதானத்திற்கு தெருவே முதல் எல்லை. தோழர்களைச் சேர்த்துக்கொண்டு, கால்பந்தாட்டத்தைத் தொடங்கிவிடுவான். விடுமுறை நாட்களில் தோழரிடையே பல்வேறு விளையாட்டுகள் பரிந்துரைக்கப்பட்டபோதிலும், கால்பந்தாட்டத்தை நோக்கியே அத்தனை பேரின் கவனத்தையும் திருப்பிக்கொண்டிருந்தான்.

அது ஓர் பண்டிகைக் காலம், ஊரில் அக்கம் பக்கத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் உறவினர்கள் வந்துகொண்டிருந்தார்கள். விடிந்தால் விவசாயம் அடைந்தால் வீடு என்று அமைதியாயிருந்த வீட்டாரெல்லாம் சுற்றத்தார் வந்துவிட்டதால் சூறாவளியைப் போல சுழன்றுகொண்டிருந்தனர். பண்டிகை, பண்டங்கள் என உறவினர்களின் வருகை சந்தோஷத்தைக் கொடுத்தபோதிலும், உறவினரை உபசரிக்க பெற்றோர்கள் விடுக்கும் எடுபிடி வேலையினை எரிச்சலாகவும் களிப்புக்கு இடையே களையாகவும் நினைத்துக்கொண்டிருந்தனர் சிறுவர்கள். அன்பரசனின் வீட்டிலும் அந்த நிலைதான். 'கொஞ்ச நேரம்மா, விளையாண்டுட்டு உடனே வந்துடுரேன்' என்று அன்பரசன் அம்மாவிடம் கெஞ்ச, அம்மாவோ, 'நாளைக்கு மாமா வர்றாங்கடா, இந்தா அரிசியும் உளுந்தும், உள்ள வெந்தயமும் போட்டுருக்கேன், கடைக்கு போயி இட்லிக்கு மாவு அரைச்சிட்டு வந்துருடா, பாதையில பாத்துப் போ, வண்டி கிண்டி வரும், அரிசியில தூசி விழுந்திராம, இடறி விழுந்து கொட்டிராம பதனமா நடந்து போ' என்று அனுப்ப, திருநாள் அன்று அன்பரசனின் நிலையோ திண்டாட்டத்திற்குள்ளாகிக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை, விடிவதற்குள் வீட்டை யாரோ தட்டும் சத்தம்? அன்பரசு, எந்திரிச்சு போய் யாருன்னு பாருடா செல்லம்? என்று அம்மா ஏவ, உறக்கத்தில் உதடுகளைப் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டே கதவைப் பார்த்து நடந்தான் அன்பரசன். கதவைத் திறந்ததும், கிழக்கிலிருந்து அவன் கண்ணில் விழுந்த சூரிய ஒளி முன்னே நின்ற மனிதனைக் காணக்கூடாதபடி கண்னைக் கூசச் செய்தது. தலையைக் குனிந்த அன்பரசனுக்கு ஓர் அதிர்ச்சி; ஆம், ஓர் அழகிய கால்பந்துடன் அன்பரசனின் மாமா வீட்டு வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். மாமா கையில் வைத்திருந்த கால்பந்தையே பார்த்துக்கொண்டிருந்த அன்பரசனின் கண்கள், மாமாவின் முகத்தைப் பார்க்க மறந்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. வணக்கம் சொல்லி, உள்ள வாங்க மாமான்னு கூப்பிடக் கூட மறந்தவனாக பந்தையே பார்த்து அன்பரசன் மலைத்து நின்றுகொண்டிருக்க, சில வினாடிகளில், 'யாருடா வந்திருக்கா அன்பரசு?' என்று அம்மாவின் குரல் ஒலிக்க, 'நான்தான் அக்கா வந்திருக்கேன்' என்று மாமாவே தன்னை அன்பரசின் அம்மாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். உடன்பிறப்பின் குரலைக் கேட்டதும், உறங்கிய இடத்திலிருந்து எழுந்து ஓடி கரம்பிடித்து இழுத்துவந்து வீட்டிலுள் நாற்காலியில் அமர்த்தினாள் அம்பரசனின் அம்மா. குடும்பக் கதைகளும், குசல விசாரிப்புகளும் தொடர்ந்தது. அக்காவுக்கும், தம்பிக்கும் பாசம் பொங்கி வழிந்துகொண்டிருக்க, அன்பரசனின் பாசமோ பந்திலேதான் ஒளிந்துகொண்டிருந்தது. 'ஏடா அன்பரசு, வா, இந்தா, இந்தப் பந்து உனக்குத்தான்' என்று தன் கையிலிருந்த கால் பந்தை அன்பரசின் கைகளில் கொடுத்த அந்நிமிடத்தில், மாமாவின் மேல் அவனுக்கு அன்பு ஊற்றெடுத்தோடியது. பந்துதான் அன்பரசனின் பண்டிகை தனக்கென கிடைத்துவிட்ட அந்தப் பந்தை தனது தோழனாக்கி, தந்தையின் தோள் வரை தான் வளருவதற்குள் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக்கொண்டான் அன்பரசன்.

தந்தையின் விளையாட்டு ரகசியங்கள் பலவற்றைக் காதுகளில் கேட்டவன் அவன். வீரன் ஒருவன் தன்னைப் போல தன் மகனையும் வீரனாகப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் உண்மையாதுதானே. பள்ளியில் சக மாணவர்களோடு தனது கால்பந்தாட்டத்தைத் தொடங்கினான், கல்லூரியிலும், கால்பந்தே அவனுக்கு இடம் வாங்கிக் கொடுத்தது. கல்லூரியின் இறுதியாண்டு விளிம்பில் இருந்த அவனுக்கு வேலையும் காத்திருந்தது. இன்னும் இரண்டே மாதங்கள்; தேசிய அளவில் நடைபெறவிருக்கும் கால்பந்தாட்டப் போட்டியில் வீரனாகக் களமிறங்க தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டிருந்தான் அன்பரசன்.

அது ஒரு மாலைப் பொழுது, சுமார் ஐந்தே முக்கால் மணி, மேல் வானத்தில் சூரியன் விடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்பரசனோ, கால்கள் நொண்டியவாறு வீடு நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தான். என்னடா அன்பரசு என்று அம்மா கேட்க, 'கால் கொஞ்சம் வலிக்குதும்மா' என்ற பதிலுடன் படுக்கையில் படுத்தான். எண்ணெய் விட்டு பிள்ளையின் காலை நீவிவிட்டாள் தாய். வேளை கடந்தும் வேதனையோ தொடர்ந்தது. தன்னைப் பார்க்கவந்த தோழனிடம் அடுத்த நாள், கல்லூரிக்கு விடுப்பு எடுதிக்கொடுத்துவிட்டான். மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார் தந்தை. இரண்டு நாள் படுக்கையில் இருந்த அவனது மனதோ, தேசிய விளையாட்டுப் போட்டியையே நினைத்துக்கொண்டேயிருந்தது. கண்களை மூடியவனாக, உறங்காமல், மனதால் மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான். காலடியிலோ தந்தை அமர்ந்து காலை தடவிக்கொண்டிருந்தார். அறையைத் தட்டும் சத்தம், மருத்துவர் உள்ளே நுழைந்ததைக் கண்டதும், அன்பரசனின் தந்தை எழுந்து நிற்க, மருத்துவரோ, அறையின் ஒரு மூலைக்கு தந்தையை அழைத்துச் சென்று, ஏதோ கூறியவாறு தென்பட்டது அன்பரசனுக்கு. மறுகணம் தந்தை மயங்கி கீழே விழுந்து கிடந்தார். என்னவென்று புரியாமல் அன்பரசன் திகைக்க, தந்தைக்கான சிகிச்சை தொடங்கியது. சிகிச்சை முடிந்து இரு கரங்களால் இருகண்களையும் பொத்தியவாறு, கண்ணீர் கரங்களுக்கிடையே வழிந்தோடிவாறு அன்பரசன் படுத்திருந்த அறையினுள் நுழைந்தார் அன்பரசனின் தந்தை. 'அப்பா, என்னாச்சிப்பா, நல்லா இருக்கீங்களா? என்று தந்தையின் மேல் அன்பரசனுக்கு இருக்கும் கரிசனை வெளிப்பட்டது. மருத்துவர் என்ன சொன்னார்? என்ற கேள்விக்கு அடுத்த நாள் நடைபெறவிருந்த அறுவை சிகிச்சை வரை அப்பா பதில் சொல்லவேயில்லை.

மறுநாள் காலை, 10.20 மணி அன்பரசனை செவிலியர்கள் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஏதோ, மருத்துவம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான் அன்பரசன், அதற்குள் அவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் மரத்துப்போனான். அவனது வலது காலில் முழங்காலுக்குக் கீழான பகுதியை மரத்தைப் போல அறுத்தெடுத்தார் மருத்துவர். என்றோ காலில் ஏற்பட்ட சிறு காயத்தைக் கவனிக்காமல், விளையாடுவதிலேயே கவனமாயிருந்ததினால், இலக்கை அடையக் காரணமான காலுக்கே அக்காயம் உலைவைத்துவிட்டது. நினைவு திரும்பாமல், படுக்கைக்குத் திரும்பினான். சுமார் 8 மணி நேரம் கழித்து மெல்லக் கண் விழித்தான். அப்பா அருகில் இருந்தார். அவனது கண்கள், கால்களைப் பார்த்துவிட்டால், என்ன ஆகுமோ என்று வலக்காலை ஒட்டியவாறு மறைத்து உட்கார்ந்திருந்தார் தந்தை. அறுத்தெடுக்கப்பட்ட தன் மகனின் கால், தான் வீட்டில் வைத்திருந்த பந்தை ஒருமுறையேனும் ஆசையாக உதைக்கவில்லையே என்று தந்தையின் உள்ளம் உடைந்திருந்தது. மகனின் உள்ளம் உடையும் முன்னதாக, உடைந்த உள்ளத்தோடு உட்கார்ந்திருந்ததால், தந்தையைத் தேற்றும் நிலைக்கு அன்பரசன் தன்னைத் தள்ளிக்கொண்டான்.

தேசிய விளையாட்டுப் போட்டி அன்று, அன்பரசனோ மைதானத்திற்குள் அல்ல அரங்கத்தில் பார்வையாளனாக அமர்ந்திருந்தான்; மனமோ மைதானத்துக்குள்ளே இருந்தது. கல்லூரி வரை தன்னைக் கொண்டுவந்த கால்பந்து, மைதானத்திற்குத் தன்னைக் கூட்டிச் செல்லவில்லையே என்ற கண்ணீர் அவனது கன்னத்தை நனைத்தது. ஒரு காலை இழந்து, கால்பந்து மைதானத்தில் அங்கும் இங்கும் உருண்டுகொண்டிருந்தது.

நண்பர்களே! வாழ்க்கையில் எது எவ்வளவு தூரம் வரும் என்பதை அறியாதவர்கள் நீங்கள். இலக்கை அடைவதற்குள், இருப்பதை இழக்க நேரிடலாம்; கால்களை இழந்தாலும், நீ மைதானத்தில் இருக்கவேண்டிய கால் பந்து என்பதை மறந்துவிடாதே. 'விளையும் பயிர் முளையிலேயே' என்பது பழமொழி, முளையே கிள்ளியெறியப்பட்டாலும், நீ மூலையில் இருக்கவேண்டியவன் அல்ல; விதையிலும் வாழவேண்டியவன்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலி 3:14) என்பதே வாய் மொழியாயிருக்கட்டும்.